பொய்கை மாட்டு சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு வர்த்தகம்

வேலூர், செப்.17: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ரூ.70 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும். கடந்த வாரங்களில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் வந்ததால் விற்பனையும் ரூ.60 முதல் 70 லட்சம் வரையே இருந்தது. அதேபோல், நேற்று நடந்த சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

வியாபாரிகளும் மாடுகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் விற்பனையும் நேற்று ரூ.70 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து நேற்று 800க்கும் மேற்பட்ட அளவில் உள்ளது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ரூ.70 லட்சம் வரை நடந்தது’ என்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை காரணமாக சந்தை நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக காணப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: