திடீர் மேக வெடிப்பு உத்தரகாண்டில் 15 பேர் பலி: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 16 பேர் மாயம்

டேராடூன்: உத்தரகாண்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 15 பேர் பலியானார்கள். மேலும் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த கனமழையால், சகஸ்த்ரதாரா, மால்தேவ்தா, சாண்டலாதேவி மற்றும் தலன்வாலா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சகஸ்த்ரதாராவில் 192மி.மீ மழை பதிவானது.

கனமழையில் இங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக வெள்ளத்தால் சாலைகள், வீடுகள் மற்றும் கடைகள் பலத்த சேதமடைந்தன.நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தினால் 15 பேர் பலியானார்கள். 16 பேர் மாயமானார்கள். மேலும் 584 பேர் பல்வேறு இடங்களில் சிக்கி தவிக்கின்றனர்.

இதனிடையே, தம்சா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம், அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற தப்கேஷ்வர் மகாதேவர் கோயிலுக்குள் புகுந்தது. கோயில் வளாகம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. நுழைவாயிலுக்கு மிக அருகில் அமைந்திருந்த பிரமாண்டமான ஹனுமான் சிலையின் தோள்வரை வெள்ளநீர் சூழ்ந்தது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த அளவு வெள்ளநீர் சூழ்ந்தது இல்லை என்று கூறப்படுகின்றது.

அதிகாலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக கோயில் வளாகத்தில் ஒரு சில பக்தர்கள் மட்டுமே இருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். டேராடூன் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 300 முதல் 400 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டள்ளனர். டேராடூனில் பவுந்தா பகுதியில் உள்ள தேவ்பூமி நிறுவன வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கிருந்த 200 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Related Stories: