குளச்சல், கன்னியாகுமரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் போராட்டம்

குளச்சல்,டிச.21: மத்திய  அரசின் புதிய மீன்வள மசோதாவை திரும்ப பெற கேட்டும், தேசிய கல்வி கொள்கைகளை  கைவிட கேட்டும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கேட்டும், டெல்லியில்  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குளச்சல் புனித காணிக்கை அன்னை  திருத்தலம் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

குளச்சல் பங்குத்தந்தை  மரியசெல்வன் தலைமை வகித்தார். தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு  பொதுச்செயலாளர் சர்ச்சில் வாழ்த்துரை வழங்கினார். குளச்சல் மறை வட்ட  முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர்  ஜேசுதாஸ் ஆகியோர் மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில்  சிறுவர்கள், பெண்கள், பங்கு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்  திருத்தலத்தை சுற்றி வந்து நிறைவடைந்தது. முன்னதாக போராட்டத்தில் கலந்து  கொள்ள சென்று மரணமடைந்த 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல்  கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பு மீனவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக  திருத்தலத்தில் திருப்பலி முடிந்ததும்  போராட்டம் தொடங்கியது.  போராட்டத்திற்கு திருத்தல அதிபர் ஆன்றனி எல்  அல்காந்தர் தலைமை வகித்தார்.

உப தலைவர் நாஞ்சில் மைக்கேல்  முன்னிலை வகித்தார். இதில் பங்கு  பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் மற்றும்  மீனவர்களின் குடும்பத்தினரும்  திரளான கலந்து கொண்டனர்.

Related Stories: