சென்னை: வனப் பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கவும் மனித-விலங்கு மோதல்களை குறைக்கும் வகையில், கோவையில் தொண்டாமுத்துார்-தடாகம் இடையே 10 கி.மீ. துாரத்திற்கு எக்கு கம்பி வேலி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், வேலி அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் எக்கு வேலிகள் அமைக்க உள்ள கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களை செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிநேரில் ஆய்வு செய்தனர். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், வனத்துறையினர், உள்ளூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித உயிர்களுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க எக்கு வேலி அமைக்கலாம்.
இந்த பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. முதல் கட்டமாக 10 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்படும் வேலிகளால் ஏற்படும் தாக்கங்களை நீதிமன்றம் கண்காணிக்கும். மேற்கொண்டு எக்கு வேலி அமைக்க வேண்டுமானால், நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். வேலி அமைக்க உள்ள இடத்தின் இரு பகுதிகளிலும் முள்மரங்கள், முட்புதர்களை வளர்த்து இயற்கை வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை வனப்பகுதியில் உள்ள சில பகுதிகள், சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமானது என்பதால், எந்த மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 3வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
