சென்னை: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற 11வது காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு பேசியதாவது: ஒரு கூட்டாட்சி அமைப்பில், மாநில அரசுகள் மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் சுமுகமாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். ‘அமைதி, வளம், வளர்ச்சி’ இந்த மூன்றும் இருந்தால்தான், மாநிலங்கள் சிறப்பாக வளர்ச்சியடையும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்கூட மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் கனிம வளங்களை தனியார் நிறுவனம் வெட்டி எடுப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியதால், அப்பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போது அது மாநில அரசுக்குத்தான் நெருக்கடியை கொடுத்தது. அந்த நேரத்தில் தமிழ்நாடு முதல்வர், சட்டமன்றத்தில் மேற்படி ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றும்போது, அந்த பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதையும் மீறி நடந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.
இருந்தபோதிலும், இப்படிப்பட்ட பாதிப்புகள் குறித்து, சட்டமன்றத்தில் விவாதித்தாலும், முடிவுகள் ஒன்றிய அரசின் கையில் இருப்பதால், அதை விவாதித்தாலும் எந்த பயனும் ஏற்படுவதில்லை. 50 சதவிகித வரியை பெறும் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு தரவேண்டிய, சமகர சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ரூ.2,152 கோடி நிதியை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்காமலே உள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பான 60 சதவிகித நிதியை கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்கவில்லை.
அதேபோல் புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் மாநிலங்கள் பாதிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மிகக்குறைந்த அளவில் மட்டுமே நிதி விடுவிக்கப்படுகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் எவ்வாறான மோசமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இது விளக்குகிறது. மாநிலங்களுக்கு முழுமையாக நிதி சுயாட்சி வழங்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனால் மாநில மக்களுக்கு பயனளிக்கும் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
