தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இருமாநில பிரச்சனையை தீர்க்கும் விதமாக புதியதாக தனி நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘புதிய தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு காலக்கெடு விதித்து இருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசால் உடன்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தென் பெண்ணையாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் தீர்வு காணும் விதமாக பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. எனவே தென் பெண்ணையாறு பிரச்சனையை தீர்க்க தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். அது தான் சரியானதாக இருக்கும். ஏனெனில் எங்களது எந்தவித கோரிக்கைக்கும் கர்நாடகா அரசு இறங்கி வரவில்லை. குறிப்பாக இந்த வழக்கு கடந்த 2018ம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருந்து வருவதால் தீர்வு வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கர்நாடகா அரசு வழக்கறிஞர், ‘‘ஒன்றிய அரசின் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் இடையே உடன்பாடு காண ஒன்றிய அரசு முயல்கிறது. ஆனால் தமிழக அரசு பேச்சுவார்த்தை தேவையில்லை என்று கருதுகிறது. கர்நாடகா பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளது. குறிப்பாக இந்த நீர் பங்கீடு விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எட்ட எங்களது தரப்பில் உதவ தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு இரு அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: