ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.24,307 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 92 நிறுவனங்களுடன் கையெழுத்து, 49 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்

கிருஷ்ணகிரி: ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 92 நிறுவனங்களுடன் ரூ.24,307 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார். இந்த 4 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் பல லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் குவிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அண்மையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் ரூ.15,500 கோடி அளவிற்கு முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதனை தொடங்கி வைப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓசூருக்கு வருகை தந்தார். காலை 11 மணிக்கு, சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்திற்கு வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலசில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை, அவர் தொடங்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜெர்மன், லண்டன் போன்ற அயல்நாடுகளில் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீட்டுகளை பெற்று விட்டு, தமிழகம் திரும்பி உள்ளேன்.

திரும்பிய 3 நாளில் இந்த முதலீடு மாநாட்டில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இன்று (நேற்று) 24 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. எப்போதுமே நமது ரெக்கார்டை நாம் தான் பீட் செய்வோம். அதுமட்டுமின்றி 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ரூ.1,700 கோடி மதிப்புள்ள திட்டங்களும் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் புதுமையும், திறமையும் சந்திக்கும் நகரம். தமிழக வரைப்படத்தில் ஓசூருக்கு என்று சிறந்த அடையாளம் உள்ளது. வளர்ச்சி மூலம் இந்தியாவை கடந்து, உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து ஓசூர் ஒளி வீசுகிறது.

அப்படிப்பட்ட ஓசூரில், தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்கிறேன். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறையில் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு முக்கியமான காரணம் துடிப்பும், இளமையும் நிறைந்த அமைச்சர் டிஆர்பி ராஜா தான். கடந்த மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் துவக்க விழா, இன்று ஓசூரில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அடுத்த மாதத்திற்கான டார்கெட்டையும் அமைச்சர் கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வரும் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை நிர்ணயித்தோம்.

அதற்கு தொழில் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். அந்த அடிப்படையில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை மேலும், மேலும் வலுப்படுத்தி, தற்போது உலகளாவிய நாடுகளின் கவனம் ஈர்த்து தொழில் ஈட்டும் மாநிலமாக தமிழ்நாடு மாறி நிற்கிறது. அதனால் தான், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 11.50 சதவீதம் என்ற வீதத்தில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்கள், இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் குறிக்கோள். இந்த அடிப்படையில், நான்கு ஆண்டுகளில் இதுவரை  இல்லாத அளவில், தொழில் வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், தொழில் வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஸ்டாலின் என்றால் மேன் ஆப் ஸ்டீல் என்று பெயர். அதாவது இந்த பெயருக்கு ஏற்ப எக்கு போன்று உறுதியுடன் செயல்பட்டு, எங்களுடன் துணை நின்று செயல்படும் அனைத்து தொழில்துறை முதலீட்டாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவோம். தமிழ்நாடு ரைசிங் மட்டும் அல்ல, தமிழ்நாடு நாளைய இந்தியாவின் அடையாளமாகவும் மாறும். இவை அனைத்திற்கும் மேலே புதிய அறிவிப்பு ஒன்றையும் தெரிவிக்கிறேன்.

வரும் அக்டோபர் 9, 10ம் தேதிகளில் கோவையில் தொழில் முதலீட்டாளர்களின் உலக புத்தொழில் மாநாடு நடக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து திரளாக பங்கேற்க உள்ளனர். அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும். இந்த தொழில் முதலீடு மாநாடு என்பது உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு திருப்பும் ஒரு இடமாக அமையும்.

அதில் உங்களது பங்கேற்பும் மிகவும் அவசியம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, அங்கிருந்து எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

* கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி தொழிற்பூங்காவில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2 விரிவாக்க திட்டங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி தொழிற்பூங்காவில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி வரிசையை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் கலைந்துரையாடினார். பின்னர் அவர் பேசுகையில், ‘ஓசூர் பகுதியின் தொழில் வளர்ச்சியில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அளிக்கும் பங்களிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிப்பட்ட கம்பெனியின் நியூ டெல்டா ஸ்மார்ட் மேனிபேக்சரிங் யூனிட் தொடங்கப்படுவதும், புதிய விரிவாக்கமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் புரடக்சன் அண்டு எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையேயான நம்முடைய கூட்டு முயற்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதன் அடுத்தகட்டமாக தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களிலும் உங்களின் விரிவாக்க திட்டங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் திறன் வளத்தை கருத்தில் கொண்டு, ஒரு ஆர் அண்டு டி சென்டரை நீங்கள் சென்னையிலும், கோவையிலும் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும், திராவிட மாடல் அரசு முழுமையாக வழங்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

* ஓசூரில் ரூ.400 கோடியில் உலக தரத்தில் ஐடி பார்க்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ஒரு காலத்தில் சிறு தொழில் நகரமாக இருந்த ஓசூர், இன்று தமிழகத்தில் தொழில் நகரமாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரியில் மட்டும் தற்போது ஒரு லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஓசூரில் 2900 ஏக்கரில் சிப்காட், இதில் 371 தொழில் நிறுவனங்கள் உள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி தொழில் பூங்கா, சுகாதாரமான நீர், மகளிர் விடுதி என்று ஏராளமான வளர்ச்சியை ஓசூர் கண்டுள்ளது. சூளகிரியில் 689 ஏக்கரில் தொழில் பூங்கா, 1379 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம், குருபரப்பள்ளியில் 180 ஏக்கரில் தொழில் பூங்கா என்று ஏராளமான தொழிற்சார்ந்த திட்டங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தொழில் நகரமாக ஓசூர் உயர்ந்து வரும் நிலையில், அதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி எந்த அளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நகரின் கட்டமைப்பும் முக்கியம்.

அறிவுசார் செயல்திட்டங்கள், சர்வதேச விமான நிலையம் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அறிவுசார் பொருளாதார மண்டலமாக மாற்றும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் 5 லட்சம் சதுரடியில் ரூ.400 கோடியில் உலக தரம் வாய்ந்த ஐடி பார்க், 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இப்படி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் இடமாக ஓசூர் உள்ளது. அப்படிப்பட்ட ஓசூரில் இந்த மாநாடு நடக்கிறது’ என்றார்.

* ரூ.210 கோடியில் சிப்காட் விரிவாக்க பணிகள்
ஓசூரில் ரூ.210 கோடி மதிப்பில் சிப்காட் விரிவாக்க பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 131.44 ஏக்கர் பரப்பில், சிப்காட் விரிவாக்க பணிகள் தொடங்கிய நிலையில், 22 புதிய தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் உள்ளது. இதன் மூலம் 6,700 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்த சிப்காட் மூலம் ரூ.2730 கோடியில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

* இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகர்
ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஓசூரில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நான் அறிவித்திருந்தேன். இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க, ஓசூர் பகுதியை சுற்றியிருக்கும் பொருத்தமான நிலப்பகுதி அடையாளம் காணப்பட்டு, அதை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை டிட்கோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த பன்னாட்டு விமான நிலையம், மற்றுமொரு புதிய வளர்ச்சிப் பாதையில் ஓசூரை பயணிக்க வைக்கும். அதனால் தான், மற்ற மாநிலங்களுக்கு சவால் விடும் நகரமாக ஓசூர் இன்றைக்கு ஆகியிருக்கிறது. சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கும், தன்னம்பிக்கையோடு முன்னேறும் மகளிருக்கும், தொழிற்சாலைகள், ஓசூரை நோக்கி தொடர்ந்து சாரை சாரையாக வருகின்றன. இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகராகவும் ஓசூர் தான் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு, ஓசூரின் அடுத்த கட்ட உயர்வுக்கான கதவுகளைத் திறக்கும். நான் அதை தொடர்ந்து கண்காணிப்பேன் என்றார்.

* ஜெர்மன், லண்டன் பயணத்தில் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகளை பெற்று விட்டு, தமிழகம் திரும்பி உள்ளேன்.
* திரும்பிய 3 நாளில் 24 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ரூ.1,700 கோடியில் திட்டங்களும் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
* தற்போது உலகளாவிய நாடுகளின் கவனம் ஈர்த்து தொழில் ஈட்டும் மாநிலமாக தமிழ்நாடு மாறி நிற்கிறது.
* இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 11.50% என்ற வீதத்தில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது.
* தமிழ்நாட்டில் இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Stories: