எம்எல்ஏக்கள் பங்கேற்பு அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு தொண்டர்கள் உற்சாகம்

மன்னார்குடி, டிச. 16: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு மீண்டும் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இது அக்கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமமுகவிற்கு மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்று திருவாரூர் மாவட்ட அமமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தேரடி பகுதியில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பட்டாசு வெடி த்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் பைங்காநாடு அசோகன், ரெங்கராஜ், நீடா சங்கர், பெருவை அண்ணாதுரை, மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் சரவனச்செல்வன், அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: