ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: தீவிரவாதத்தை சில நாடுகள் ஆதரிப்பதை ஏற்க முடியுமா என பிரதமர் மோடி ஆவேசம்

தியான்ஜின்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்து ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என வலியுறுத்திய பிரதமர் மோடி, சில நாடுகள் தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியுமா என ஆவேசமாக பேசினார்.இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்தது. மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று முன்தினம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், நிறைவு நாளான நேற்று அனைத்து தலைவர்களும் மாநாட்டில் உரையாற்றினர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த பல தசாப்தங்களாக இந்தியா இரக்கமற்ற தீவிரவாதத்தின் கடுமையான வடுக்களை தாங்கி வருகிறது. எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்துள்ளனர். எண்ணற்ற குழந்தைகள் அனாதைகளாகி உள்ளனர். சமீபத்தில், பஹல்காமில் தீவிரவாதத்தின் மிக கொடூரமான முகத்தை நாம் கண்டோம். இந்தத் தாக்குதல் இந்தியாவின் மனசாட்சியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிற்கும், மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு வெளிப்படையான சவாலாகவும் இருந்தது. இந்த துயரத்தின் போது இந்தியாவுடன் நின்ற அனைத்து நட்பு நாடுகளுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அடித்தளமாக அமைகின்றன. ஆனாலும், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் இந்த பாதையில் முக்கிய சவால்களாகவே உள்ளன. தீவிரவாதம் என்பது தனிப்பட்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் பொதுவான சவாலாகும். இதில் எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது நமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயல்பானது. பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் நிறத்திலும் நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு நாம் செலுத்தும் கடமை.

இவ்வாறு பிரதமர் மோடி, பாகிஸ்தானை மறைமுக குறிப்பிட்டு பேசினார். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் கருத்துடன் உடன்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எஸ்சிஓ நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தைத் தொடர உறுதியளித்த அதே வேளையில், அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இறையாண்மை கொண்ட அரசுகளும் அவற்றின் நிறுவனங்களும் முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளன என்பதை உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கும் கடந்த மே 21 அன்று ஜாபர் எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மற்றும் குஜ்தார் தாக்குதல் உட்பட பாகிஸ்தானில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கும் எஸ்சிஓ தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்துடன் மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சீன பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார்.

புடினை வரவேற்க ஆவலுடன் உள்ளேன்;
வரும் டிசம்பரில் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புடின் டெல்லிக்கு வர உள்ளார். அப்போது புடினை வரவேற்க இந்தியா காத்திருப்பதாக மோடி கூறினார்.

எஸ்சிஓ வளர்ச்சி வங்கி; சீன அதிபர் வலியுறுத்தல்;
எஸ்சிஓ அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் 16 பார்வையாளர் நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் எஸ்சிஓ அமைப்பின் வளர்ந்து வரும் ஈர்ப்பை கருத்தில் கொண்டு, வளர்ச்சி வங்கியை உருவாக்கும் முயற்சியை துரிதப்படுத்த வேண்டுமென மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினார். சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கிக்கு போட்டியாக பிரிக்ஸ் அமைப்பு சார்பில் புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய முதலீட்டு உள்கட்டமைப்பு வங்கி ஆகியவை ஏற்கனவே சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் எஸ்சிஓ அமைப்பிற்கான வளர்ச்சி வங்கி அமைக்கப்பட வேண்டுமென ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார்.

மேற்கத்திய நாடுகளே போருக்கு காரணம்;
எஸ்சிஓ மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘‘உக்ரைனில் கடந்த 2014ல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பானது, மேற்கத்திய நாடுகளால் தூண்டப்பட்டது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை ஆதரிக்காத நாட்டின் அரசியல் தலைமை, மேற்கத்திய நாடுகளின் தூண்டப்பட்ட போராட்டத்தின் மூலம் அகற்றப்பட்டது. உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல். இதை பலமுறை வலியுறுத்தியும், உக்ரைனை நேட்டோவில் இணைய மேற்கத்திய நாடுகள் மீண்டும் மீண்டும் முயற்சித்தன. இதுவே உக்ரைன் போர் ஏற்பட காரணமானது’’ என்றார்.

உக்ரைன் போரை நிறுத்த புடினிடம் வலியுறுத்தல்;
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பொருளாதாரம், நிதி மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சியில் திருப்தி தெரிவித்தனர். உக்ரைனில் அமைதியைக் கொண்டுவருவதற்கான அனைத்து சமீபத்திய முயற்சிகளையும் வரவேற்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதே மனிதகுலத்தின் அழைப்பு என்று வலியுறுத்தினார். கடினமான காலங்களிலும் இந்தியாவும் ரஷ்யாவும் எப்போதும் தோளோடு தோள் சேர்ந்து முன்னேறியதாக ரஷ்யாவின் நம்பகத்தன்மையை பாராட்டிய பிரதமர் மோடி, உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவு முக்கியம் என்றார்.

10 நிமிடங்கள் காத்திருந்து மோடிக்கு காரில் லிப்ட் தந்த ரஷ்ய அதிபர் புடின்;
எஸ்சிஓ மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலுக்கு பிரதமர் மோடியை, அதிபர் புடின் தனது உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பிய ஆரஸ் லிமோசின் காரில் அழைத்துச் சென்றார். பிரதமர் மோடி வருகைக்காக அதிபர் புடின் 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும் செய்தார். பின்னர் இரு தலைவர்களும் காரில் ஏறி பேசியபடி ஓட்டலுக்கு சென்றனர். ஓட்டலை கார் சென்றடைந்த பிறகும் இரு தலைவர்களும் கீழே இறங்காமல் சுமார் 1 மணி நேரம் வரை பேசியதாக ரஷ்யாவின் அரசு எப்எம் ரேடியோ செய்தி வெளியிட்டது. இத்தகவலை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும் உறுதிபடுத்தி உள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டுமென மிரட்டுகிறார். இந்த சூழலில் பிரதமர் மோடி, புடினுடன் மிக ரகசியமாக காரில் ஆலோசித்திருக்கிறார். இந்த ஆலோசனை எந்த விதத்திலும் வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதற்காக புடின் தனது காரில் வைத்து பிரதமர் மோடியிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடினுடன் காரில் பயணிக்கும் புகைப்படத்தை பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories: