கால்வாய் பாசனத்தில் நெல் நாற்றுவிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்

பள்ளிபாளையம் : கால்வாய் பாசனப் பகுதியில், நெல் நாற்று விடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தரமான நெல்விதைகளை வாங்கி பாத்தியமைத்து நாற்றங்கால் தயாரித்து நடவுப்பணிக்கு தயாராகி வருகின்றனர்.

மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனத்தில், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் சுமார் பத்தாயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்படும். மேட்டூர் அணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக போதிய பாசன நீர் இருப்பு இருப்பதால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கால்வாய் பாசனத்திற்கு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டது.

கால்வாய் பாசனப் பகுதியில், ஏற்படும் மழை, பனிபொழிவு ஆகியவற்றை கணக்கிட்டு விவசாயிகள் ஆடி மாதம் முடிந்த பின்னரே நாற்றுவிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்குகின்றனர். அதன்படி, தற்போது நாற்றங்கால் தயார் செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், கல்லங்காட்டு வலசு, உப்புகுளம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாற்றங்கால் அமைப்பதற்கு வயல்பகுதியில் ஒரு சிறு துண்டு நிலத்தை தேர்வு செய்து, உழவு மாடுகளை பயன்படுத்தி நாற்றுவிடுகின்றனர்.

உழவு மாடு இல்லாத விவசாயிகள், டிராக்டர் மூலம் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆவணி மாத இடையில் நாற்று நடும் பணிகளை துவங்கி, புரட்டாசி தீபாவளிக்குள் நாற்று நடும் பணிகள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு தேவையான தரமான விதை நெல், பள்ளிபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் வெப்படை, குமாரபாளையம் துணை மையத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விதை நெல்லை விவசாயிகள் வாங்கிச்சென்று விதை நேர்த்தி செய்து நாற்றுவிட்டு வருகின்றனர்.

Related Stories: