அரசு, தனியார் சேவைகளுக்கு ஓடிபி பெற தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: மதுரையைச் சேர்ந்த தங்கமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகளுக்கு ஓடிபி, ஆதார் எண் போன்ற விபரங்களை கேட்கின்றனர். தமிழ்நாடு காவல்துறையின் குடியுரிமை பிரிவு, இ-சேவைகள், உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான டெலிவரி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செல்போன் எண் மற்றும் ஓடிபி பெறப்படுகிறது. உணவு ஆர்டர் செய்வது, பயண டிக்கெட்களை முன்பதிவு செய்வது போன்ற அவசர செயல்களுக்கு கூட ஓடிபி விபரங்களை பகிர வேண்டியது உள்ளது.

எனவே, அரசு மற்றும் தனியார் சேவைகளை பெறும்போது ஓடிபி பெற தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர், ‘‘ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் அதனை குறிப்பிட்டு மனுதாரர் வழக்கு தொடரலாம். அதனை விடுத்து ஒட்டுமொத்தமாகக் கூறி தாக்கல் செய்தது ஏற்கத்தக்கது அல்ல. இன்றைய காலகட்டத்தில் ஓடிபி பெறாமல், எந்த ஆன்லைன் பணியும் நடைபெறாது. மனுதாரர் விளம்பர நோக்கில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: