ககன்தீப் சிங் குழு 3வது நாள் கருத்துகேட்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: 40 அரசு ஊழியர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மனு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தை அமல்​படுத்த வேண்​டும் என்று ககன்​தீப்சிங் பேடி குழுவின் 3வது நாள் கருத்​துகேட்பு கூட்​டத்​தில் 40 அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​கத்தினர் மனு அளித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் (சிபிஎஸ்), ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகிய 3 வித​மான ஓய்​வூ​திய திட்​டங்​கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு அறிக்​கையை செப்டம்பர் 30ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்​க வேண்டும் என்று அரசு உத்​தர​வு பிறப்பித்துள்ளது.

இதை ​தொடர்ந்து, அக்​குழு கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களின் கோரிக்கைளையும், கருத்​துகளையும் கேட்​டறிந்து வரு​கிறது. ககன்தீப் சிங் பேடி குழுவின் 3வது நாள் கருத்துக்கேட்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் உள்பட 40 அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் கோரிக்கையையும் எடுத்துரைத்தனர்.
மேலும், அதுதொடர்பான மனுக்களையும் ககன்தீப் சிங் பேடி குழுவிடம் சமர்ப்பித்தனர். முதல் இரண்டு கூட்டங்களைப் போன்று 3வது கூட்டத்திலும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ரவிக்குமார் அளித்த மனுவில், ‘‘‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது. குடும்ப ஓய்வூதியமும் இல்லை. ஒன்றிய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) பார்ப்பதற்கு பழைய ஓய்வூதிய திட்டம் போல் தோன்றும். ஆனால், அடிப்படையிலேயே இரண்டும் வேறு வேறு திட்டங்கள். யுபிஎஸ் திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் பங்களிப்பாக அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதியமும் மாறுபடும். எனவே, அரசு ஊழியர்களுக்கு சிபிஎஸ், யுபிஎஸ் திட்டங்கள் வேண்டாம். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். இதனால். அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. இதை கணக்கீட்டு உதாரணங்களுடன் எங்களால் விளக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: