காசா: காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்கள், மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது நடந்த வன்முறைகள் மற்றும் பட்டினி காரணமாக ஒரே நாளில் 64 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023, அக்டோபர் 7 முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62,686 ஆகவும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 1,57,951 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 18 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் மட்டும் 10,842 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 45,910 பேர் காயமடைந்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது நிகழ்ந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,095 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,431 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக இதுவரை 115 குழந்தைகள் உட்பட மொத்தம் 289 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 64 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 278 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றவர்களில் 19 பேர் உயிரிழந்த நிலையிலும், 123 பேர் காயங்களுடனும் காசா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றைத் தவிர, பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஒரு குழந்தை உட்பட புதிதாக 8 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக காசா மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன.
