கூடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதர் நியமனம்: அதிபர் டிரம்பின் தீவிர விசுவாசி

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளர் செர்ஜியோ கோரை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கடந்த 2023 மே மாதம் நியமிக்கப்பட்ட எரிக் கார்செட்டியின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘’38 வயதாகும் கோர் எனது சிறந்த நண்பர். பல ஆண்டுகள் என்னுடன் இணைந்து பயணிக்கிறார். எனவே, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோருக்கு பதவி உயர்வு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என கூறி உள்ளார். செர்ஜியோ கோர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக என்னை அறிவித்துள்ள அதிபர் டிரம்புக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதிகளவு வாங்குவதால் இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் கூடுதல் வரிகள் விதித்து வரும் நிலையில், செர்ஜியோ கோரின் நியமனம் கவனத்தை பெற்றுள்ளது. இவருக்கும் இந்தியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் டிரம்ப் தனது தீவிர விசுவாசியை இந்திய தூதராக நியமித்துள்ளார்.

செர்ஜியோ கோர் உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்டில் பிறந்தவர். இவரது தாயார் இஸ்ரேல் நாட்டை பூர்வீகமாக கொண்டவர். செர்ஜியோ தற்போது வெள்ளை மாளிகையின் பணியாளர் அலுவலக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது நியமனத்தை செனட் அவை ஏற்றுக் கொள்ளும் வரை இந்த பதவியில் அவர் நீடிப்பார்.

* டிரம்பை கோபப்படுத்திய உளவு அதிகாரி டிஸ்மிஸ்
ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப் கூறியதற்கு எதிரான உளவுத்துறை மதிப்பீட்டை வெளியிட்ட ராணுவ உளவு அமைப்பின் தலைவர் ஜெப்ரி க்ரூஸ், கடற்படையின் ரிசர்வ் தலைவரான வைஸ் அட்மிரல் நான்சி லாகோர் மற்றும் கடற்படை சிறப்பு போர் கட்டளையை மேற்பார்வையிடும் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மில்டன் சாண்ட்ஸ் ஆகியோரையும் ஹெக்சேத் பணிநீக்கம் செய்து உள்ளனர்.

* போதையில் வாகனம் ஓட்டினால் உடனே நாடு கடத்தல்
அமெரிக்காவில் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுபவர்களை உடனே நாடு கடத்தவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இந்தியா உள்ளிட்ட புலம் பெயர்ந்த மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: