விராலிமலை வட்டாரத்தில் 100 பயனாளிகளுக்கு மானியத்தில் கறவை மாடுகள்

விராலிமலை, டிச.11: விராலிமலை வேளாண்மைதுறையின் மூலம் விராலிமலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மணப்பாறை சந்தையில் கறவை மாடுகள் கொள்முதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் வழிகாட்டுதலின்படி நடப்பாண்டில் மானாவாரி நிலங்களில் 2019-2020ம் ஆண்டு செலவிடப்படாத நிதியில் ரூ.60லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் ரூ.33 லட்சம் மதிப்பில் கறவை மாடு ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் வழங்கப்படுகிறது. ரூபாய் 15 ஆயிரம் மானியத்தில் ஒரு கறவை மாடு, ரூபாய் 15 ஆயிரம் மதிப்பில் 10 ஆடுகள், ரூபாய் 3 ஆயிரம் மதிப்பில் 10 நாட்டு கோழிகள் என மொத்தம் ஒரு பயனாளிக்கு ரூபாய் 33 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மணப்பாறை சந்தையில் கறவை மாடுகளை கொள்முதல் செய்தனர். விராலிமலை கால்நடை உதவி மருத்துவர் பிரகானந்தன், விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமு, வேளாண்மை உதவி அலுவலர்கள் அருண்குமார், ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: