இந்திய தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க ரூ.183 கோடி நிதி அமெரிக்கா தரவில்லை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: அமெரிக்க அரசு திறன் துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில், ‘‘அமெரிக்கா இந்தியாவில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக யூஎஸ்ஏஐடி மூலமாக 21 மில்லியன் டாலர் நிதியை(ரூ.183.8கோடி) வழங்கியது. இந்த நிதியானது பிப்ரவரி மாதத்துடன் ரத்து செய்யப்படுகின்றது” என குறிப்பிட்டு இருந்தது. இந்த அறிக்கையை அடுத்து கடும் சர்ச்சை நிலவி வருகின்றது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘ இந்தியாவில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் அல்லது நிதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் ஏற்பட்ட செலவினங்களின் விவரங்களை அவசரமாக வழங்குமாறு வெளியுறவு துறை அமைச்சகம் கோரியிருந்தது.

இதனை தொடர்ந்து ஜூலை 2ம் தேதி அமெரிக்க தூதரகம் 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை இந்தியாவில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் அல்லது நிதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்கள் குறித்த தரவுகளை பகிர்ந்து கொண்டது. இதில்,‘‘2014 ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில் இந்தியா வாக்காளர்கள் வாக்குப்பதிவிற்காக சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் மூலமாக 21 மில்லியன் நிதியை(ரூ.183.8கோடி) பெறவில்லை. இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவு தொடர்பான எந்த நடவடிக்கையையும் அந்நிறுவனம் செயல்படுத்தவில்லை” என கூறியுள்ளார்.

Related Stories: