கயாஜி: 30 நாள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுவது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். கயாஜி நகரில் நடந்த விழாவில் 2 புதிய ரயில்கள், கங்கை மீது ரூ.1000 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 30 நாள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்கும் 2025 ஆம் ஆண்டு அரசியலமைப்பு 130வது திருத்தம் மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் சிறையில் இருந்து அரசாங்கங்களை நடத்துவது, கம்பிகளுக்குப் பின்னால் இருந்து கோப்புகளில் கையெழுத்திடுவது, அரசியலமைப்பு உரிமையை கிழித்து எறிவது போன்ற ஒரு வருந்தத்தக்க சூழ்நிலையை நாங்கள் கண்டிருக்கிறோம். ஆனால் எனது 11 ஆண்டுகால அரசில் ஊழலின் கறை எதுவும் இல்லை.
எதிர்க்கட்சியினர் பீகாரில் ஆட்சியில் இருந்தபோது அதன் ஊழல் ஊருக்கே தெரியும். எனவே, ஊழல் நிறைந்த முதலமைச்சர் அல்லது பிரதமரை கூட 30 நாட்கள் சிறையில் கழித்தால், அவரை பதவி நீக்கம் செய்ய ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம். ஒரு அரசு எழுத்தர், குறுகிய காலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார். ஆனால் நாங்கள் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தபோது, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கோபமடைந்தனர். அவர்கள் தங்கள் சொந்த பாவங்களுக்கு தண்டனையை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் என்பதால் அவர்கள் கோபப்படுகிறார்கள்.
இன்னும் ஒரு அச்சுறுத்தல் உள்ளது. நமது நாடு எதிர்கொள்ளும் ஊடுருவல்காரர்களின் அச்சுறுத்தல். அதைப் பற்றி நான் எனது சுதந்திர தின உரையிலும் பேசினேன். அவர்கள் நமது நாட்டின் வளங்களில் பங்கெடுக்க அனுமதிக்க முடியாது. எனவே, மக்கள்தொகைப் பகுப்பாய்வு பணிக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால் காங்கிரசும் ஆர்ஜேடியும் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க விரும்புகின்றன. இவ்வாறு பேசினார்.
* கெஜ்ரிவால் மீது பாய்ச்சல்
பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் பேசும் போது டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி பேசுகையில்,’ 30 நாள் சிறையில் இருந்தால் ஏன் பதவி நீக்கம் என்று எதிர்க்கட்சியின் குரல் எழுப்புகிறார்கள். அவர்களுக்கு எனது பதில் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தான். அவர் சிறைக்குச் சென்ற பிறகும், அங்கிருந்து அரசாங்கத்தை நடத்தியது வெட்கக்கேடானது. அதே போல் மேற்குவங்கத்திலும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற பிறகும், 2 திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள், அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்து தங்கள் பதவிகளில் எப்படி இருக்க முடியும்? நான் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்றார்.
