ஒடுகத்தூர், ஆக.23: ஒடுகத்தூர் அருகே சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு ஆம்புலன்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒடுக்கத்தூர் பேரூராட்சி, கே.ஜி.ஏரியூர் அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வி(50). இவரது மகன் ராஜ்குமார்(25). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேலை நிமித்தமாக ஒடுகத்தூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். பெரிய ஏரியூர் கிராமம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக ஓடியது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜ்குமாரின் சடலம் ஊருக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது, கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்த கோரி சடலத்தை கொண்டு வந்த ஆம்புலன்ஸ்சை சிறைபிடித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாலை 3 மணியளவில் தொடங்கிய மறியல் இரவு 7 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. அதுவரையிலும் ஆம்புலன்ஸ்சில் இருந்து சடலத்தை இறக்கவில்லை. இந்த மறியலால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றது. தகவலறிந்து வந்த தாசில்தார் வேண்டா, டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாய நிலமாக மாறி விட்டது. இதனால் கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் விவசாய நிலம் வழியாக ஒற்றையடி பாதையில் சுமந்து சென்று அடக்கம் செய்து வருகிறோம். வழியில் உள்ள கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் சடலத்தை பெற்றுக்கொண்டு ஆம்புலன்சை கிராம மக்கள் விடுவித்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டிற்கு கிராம மக்களுடன் சென்று பார்வையிட்டனர். பின்னர், தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் முன்னிலையில் சுடுகாட்டிற்கு செல்ல தற்காலிக பாதை அமைக்க ஏற்பாடு செய்தனர். இரவு 8 பிறகு ஜேசிபி இயந்திரம் வந்தவுடன் தற்காலிக பாதை அமைத்து சடலத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
