சத்தியமங்கலம், ஆக.20: தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தாளவாடி அருகே உள்ள மரியபுரம் கிராமத்திற்குள் நுழைந்தன. அங்கு விவசாயி பிரகாஷ் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின.
யானைகள் தென்னை மரங்களை முறிக்கும் சத்தம் கேட்ட விவசாயி பிரகாஷ் அக்கம்பக்கம் உள்ள விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளை ஒரு மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
