காதலை ஏற்காததால் மாணவியை கொலை செய்ய திட்டம் சென்னை பல்கலைக்கழகத்துக்குள் புர்கா அணிந்து வந்த காதலன் கைது

* உரிய நேரத்தில் சிக்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
* கொடுவாள், கத்தி உள்பட 3 ஆயுதங்கள் பறிமுதல்

சென்னை: தனது காதலை ஏற்காத மாணவியை கொலை செய்யும் நோக்கத்துடன் சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புர்கா அணிந்து வந்த வடமாநில வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொடுவாள், கத்தி உள்பட 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மதியம் புர்கா அணிந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் அங்கும் இங்கும் பெண்போல் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்பு அறையின் அருகே நோட்டமிட்டபடி சுற்றியதால் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பல்கலைக்கழக செக்யூரிட்டி முத்து புர்கா அணிந்து வந்தவரை பின்தொடர்ந்துள்ளார். அதேநேரம் புர்கா அணிந்து வந்தவர் காலில் ஆண்கள் அணியும் செருப்பு போட்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்து செக்யூரிட்டி முத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன்படி, அண்ணா சதுக்கம் போலீசார் பல்கலைக்கழகத்தின் வாலாஜா சாலையில் உள்ள நுழைவாயில் அருகே புர்கா அணிந்து இருந்தவரை பிடித்து விசாரித்த போது, அவர் பெண் இல்லை என்றும், வடமாநிலத்தை சேர்ந்த கரண் மேத்தா (24) எனவும் தெரியவந்தது.

இவர் சென்னை சவுகார்பேட்டையில் தனது மாற்றுத்திறனாளி தாயுடன் தங்கியிருந்து, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.72 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. பிறகு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, 2 கொடுவாள் கத்தி மற்றும் ஒரு அரிவாள் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, எனது தந்தை உத்தம்சந்த் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கரண் மேத்தாவுக்கு ஆன்லைன் சூட்டம் பழக்கம் உள்ளது.

அதேநேரம் கரண் மேத்தாவுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகியுள்ளார். பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாணவி, ஆன்லைன் சூதாட்டத்தை கைவிட கோரி கரண் மேத்தாவிடம் கோரியுள்ளார். ஆனால் அவர் கைவிடவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதனால் கரண் மேத்தா பலமுறை தனது காதலியை சந்திக்க முயன்றும் அவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம் ஆன்லைன் சூதாட்டம் மூலம் சிறுக சிறுக மொத்தம் ரூ.24 லட்சம் பணத்தை அவர் இழந்துள்ளார்.

பிறகு தன்னுடன் வேலை செய்யும் நபர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மேலும், கரண் மேத்தா ஆன்லைன் மூலமே ‘சிஏ’ படித்து வருகிறார். தேர்வுக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலையை கைவிட்டுள்ளார். நண்பர்களிடம் வாங்கிய கடன் தொகையை வைத்து ஆன்லைன் மூலம் ெபாருட்கள் வாங்கி விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். அதேநேரம் அவரது காதலியும் அவரை புரிந்து கொள்ளாமல் விலகிவிட்டார்.

எனவே காதலி படிக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு யாரும் சந்தேகம் வராதபடி பெண் போல் புர்கா அணிந்து வந்தது, காதலியை சந்தித்து, காதலை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்க வந்தது தெரியவந்தது. இருந்தாலும் காதலை காதலி ஏற்க மறுத்தால் அவரை கொலை செய்யும் நோக்கில் கொடுவாள் மற்றும் 2 கத்திகளை பெரியமேடு மார்க்கெட்டில் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தனது காதலியை கொலை செய்துவிட்டு, தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யும் நோக்கில் சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெண் போல் புர்கா அணிந்து அவர் வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து அண்ணா சதுக்கம் போலீசார் பெண் போல் புர்கா அணிந்து வந்த வடமாநில நபர் கரண் மேத்தா மீது ஆயுத தடை சட்டம், ஆள் மாறாட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொடுவாள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்கலைக்கழக செக்யூரிட்டி முத்து உரிய நேரத்தில் போலீசாருக்கு தகவல் அளித்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: