துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு: நாளை மனுதாக்கல் செய்கிறார்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜ நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லி வந்தார். அவரை ஒன்றிய அமைச்சர்கள், பாஜ கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பொது வாழ்வில் அவரது நீண்ட பயணம் மற்றும் பல்வேறு துறையிலும் அவரது அனுபவம், தேசத்தின் செழிப்பிற்கு மிகவும் பயனளிக்கும். அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்புடன் தேசத்திற்கான தனது சேவையை தொடர்வார்’’ என வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.

எனவே, சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தனது மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ மேலிட தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் அவருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி நிறுவனரும் துணை முதல்வருமான பவன் கல்யாண், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: