உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை டிரம்ப்-புடின் பேச்சுவார்த்தை தோல்வி; அடுத்த கூட்டத்தை மாஸ்கோவில் நடத்த திட்டம்

வாஷிங்டன்: அலாஸ்காவில் நடந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த 3 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கூட்டம் மாஸ்கோவில் நடத்தப்படும் என அதிபர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த மூன்றரை ஆண்டாக போர் நீடிக்கிறது. இரு நாடுகளும் நடத்திய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதன் பலனாக, அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக் கொண்டார். இதற்காக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் உள்ள எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ தளத்தில் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. டிரம்ப், புடின் இருவரும் அவரவர் அதிபர் விமானங்களில் ராணுவ தளத்திற்கு வந்தடைந்தனர். அங்கு புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் கைதட்டி புடினை வரவேற்பு கைகுலுக்கி பேசினார். அங்கு காத்திருந்த ரஷ்ய அரசு காரை தவிர்த்த புடின், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ காரான லிமோசினில் டிரம்புடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு புறப்பட்டார். இது ரஷ்ய தலைவருக்கு தரப்படும் வழக்கத்திற்கு மாறான வரவேற்பாகும்.

முதலில் டிரம்ப்-புடின் மட்டுமே பேசுவதாக இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இரு நாட்டு அதிபர்களுடன் முக்கிய அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றனர். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் இருந்தனர். புடினுடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இணைந்தனர். மூடிய கதவுகளுக்கு பின்னால் இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

பின்னர் அதிபர்கள் டிரம்ப், புடின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பொதுவாக செய்தியாளர்கள் சந்திப்பை அதிபர் டிரம்ப் தொடங்குவது வழக்கம். ஆனால், புடினை பேசுமாறு அவர் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து புடின் பேசுகையில், ‘‘அதிபர் டிரம்புடனான சந்திப்பு நீண்டகாலமாக தாமதமாகிவிட்ட சந்திப்பு. இந்த சந்திப்பு மிகுந்த ஆக்கப்பூர்வமாக நடந்தது. புரிந்து கொள்தல் ஏற்பட்டுள்ளது. இது உக்ரைனில் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்படுவதற்கான இலக்கை எட்ட உதவும் என நம்புகிறேன். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர போர் மூண்டதற்கு மூல காரணமான விஷயங்கள் நீக்கப்பட வேண்டும்.

இதில் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் எந்த தடைகளையும் உருவாக்காது என நம்புகிறேன். திரைமறைவு சூழ்ச்சிகள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். டிரம்பின் முயற்சிக்கு நன்றி கூறுகிறேன். அவர் அமெரிக்க மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார். அதே போல ரஷ்யாவிற்கும் அதன் சொந்த நலன்கள் இருப்பதை புரிந்து கொள்கிறார்’’ என்றார். அதைத் தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ‘‘எனது விருப்பமும் புடினின் விருப்பமும் ஒன்றாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில விஷயங்கள் பாக்கி உள்ளன.

ஆனாலும், இந்த சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அடுத்ததாக உக்ரைன் அதிபர், நேட்டோ தலைவர்களை சந்திக்க உள்ளேன். ஒப்பந்தத்திற்கு அவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும். புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக நடந்தது’’ என்றார். இறுதியாக ஆங்கிலத்தில் பேசிய புடின், ‘‘மாஸ்கோவில் அடுத்த கூட்டத்தில் சந்திப்போம்’’ என்றார். சுமார் 10 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசி முடிந்ததும் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்க முயன்றனர். ஆனால் எதற்கும் பதிலளிக்கவும் டிரம்ப், புடின் புறப்பட்டுச் சென்றனர்.

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப், புடின் இடையேயான சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் நிச்சயம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் சந்திப்பு முடிவடைந்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை எந்த மாதிரியான உடன்பாடுகள் ஏற்பட்டது என்பது குறித்தும் இரு தலைவர்கள் விரிவாக விளக்கம் அளிக்கவில்லை. அடுத்த கூட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்குமா என்பதை டிரம்ப் உறுதிபடுத்தவில்லை. இதனால் தற்போதைய சூழலில் டிரம்ப்-புடின் சந்திப்பு தோல்வியாகவே கருதப்படுகிறது.

* இந்தியாவை தண்டிப்பது புடினை கட்டுப்படுத்தாது
ரஷ்யாவை பணிய வைப்பதற்காக அந்நாட்டிடம் அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். புடினுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அரசு மிரட்டி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற வெளியுறவு விவகார கமிட்டி தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியா மீது வரி விதிப்பது ஒருபோதும் புடினை தடுக்காது. ரஷ்யா போரை நிறுத்த வேண்டுமென டிரம்ப் உண்மையிலேயே நினைத்தால், புடினை தண்டிக்க வேண்டும், உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க வேண்டும். இதை தவிர்த்த மற்ற நடவடிக்கைகள் உண்மையை திசைதிருப்பும் முயற்சிகள்’’ என கூறி உள்ளது.

ஏக்கருக்கு 2 சென்ட் தந்து வாங்கப்பட்ட அலாஸ்கா
* அதிபர்கள் டிரம்ப்-புடின் இடையே நடந்த உச்சி மாநாடு நடந்த இடத்தின் பின்னணியில் ‘அமைதியை நாடுதல்- அலாஸ்கா 2025’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதே போல, இரு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இடத்தின் பின்னணியில், ‘சமாதானத்தை தொடர்தல்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.
* அமெரிக்கா ரஷ்யா இடையே பனிப்போர் ஏற்பட்ட கால கட்டத்தில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ தளம் ரஷ்ய விமானங்களை இடைமறித்து அழிப்பதற்கான முக்கிய தளமாக செயல்பட்டது. இப்போதும் இந்த தளம் அமெரிக்க வான்வெளியில் நுழையும் ரஷ்ய விமானங்களை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* அதிபர் புடினின் விமானம் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததும் அதற்கு இருபுறமும் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து அழைத்து வந்தன.
* ராணுவ தளத்தில் புடினை வரவேற்று டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, பனிப்போரின் போது ரஷ்யாவை எதிர்க்க வடிவமைக்கப்பட்ட ராணுவ விமானங்களான பி-2 மற்றும் எப்-22 ஆகிய வானில் பறந்தபடி இருந்தன.
* 1867ல் ரஷ்யாவில் இருந்த அலாஸ்காவை அமெரிக்கா ஏக்கருக்கு 2 சென்ட் (100 சென்ட் என்பது 1 டாலர்) பணம் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் ரஷ்யாவின் நிலப்பகுதியாக இருந்த அலாஸ்கா அமெரிக்கா வசமானது. இத்தகவலையும் அதிபர் புடின் குறிப்பிட்டு பேசினார்.
* வரவேற்புக்குப் பின் டிரம்புடன் காரில் ஏற புடின் சென்ற போது, அங்கிருந்த செய்தியாளர்கள், ‘புடின், அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துவீர்களா?’ என கேட்டனர். அதற்கு அவர் தனக்கு எதுவும் கேட்கவில்லை என கூறுவது போல் காதுக்கு அருகில் கையை வைத்து சைகை செய்துவிட்டு புறப்பட்டார்.

* யாருக்கு கிடைத்தது வெற்றி?
அலாஸ்கா சந்திப்பால் டிரம்ப், புடின் இருவரில் யார் வெற்றி பெற்றது என்பது பெரிதாக பேசப்படுகிறது. உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் இன்று அமெரிக்காவில் புடினுக்கு ராஜ மரியாதை தரப்பட்டுள்ளது. சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, அதிபர் டிரம்பே நேரடியாக வந்து வரவேற்றுள்ளார். மேலும், ரஷ்யா தனது பேச்சுக்கு கட்டுப்படாவிட்டால் பயங்கர பொருளாதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டி வருகிறார். இதுவரை டிரம்பின் எந்த மிரட்டலுக்கு புடின் பயப்படவில்லை.

பின்வாங்கவும் இல்லை. அதே நேரத்தில் டிரம்பின் மிரட்டல்கள் அனைத்தும் வெற்று மிரட்டல்களாகவே உள்ளன. இதுவரை அவர் ரஷ்யாவுக்கு நேரடியாக எந்த தடையும் விதிக்கவில்லை. அலாஸ்கா சந்திப்பில் ஒப்பந்தம் ஏற்பட 75 சதவீதம் வாய்ப்பிருப்பதாக டிரம்ப் கூறி வந்தார். ஆனால் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கைவீசிக் கொண்டு சென்று விட்டார் புடின். மேலும், இந்த சந்திப்பின் மூலம் உலக மீடியாக்கள் மத்தியில் தான் ஒரு சக்திவாய்ந்த தலைவர் என்பதையும் புடின் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைன், ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டை இல்லாமல் செய்ததே புடினின் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு புடின் கூறும் அனைத்து விஷயங்களையும் டிரம்ப் ஆமோதிப்பவராகவே இருந்து வருகிறார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தி தன்னை மிகப்பெரிய தலைவராக உலகிற்கு காட்ட டிரம்ப் விரும்புகிறார். ஆனால் சொந்த நாட்டில் நடந்த பேச்சுவார்த்தையிலும் கூட விளக்கமாக எந்த விவரங்களையும் அவரால் கூற முடியவில்லை. அதிபர் தேர்தல் பிரசாரத்தில், ‘நான் அதிபரானால் 24 மணி நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என பேசிய டிரம்பால் 7 மாதமாகியும் போரை நிறுத்த முடியவில்லை.

* இந்தியா வரவேற்பு
ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் இடையே அலாஸ்காவில் நடந்த உச்சிமாநாட்டு சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கி செல்வதில் அவர்களின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்தியா பாராட்டுகிறது. உக்ரைனில் ஏற்பட்ட மோதலுக்கு விரைவில் முடிவு காண உலகம் விரும்புகிறது’ என கூறப்பட்டுள்ளது.

* சிறந்த வழி நேரடி அமைதி ஒப்பந்தம்
புடினுடனான சந்திப்புக்கு பின் அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான கொடூரமான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழி நேரடி அமைதி ஒப்பந்தமே. அதன் மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். வெறும் போர் நிறுத்த ஒப்பந்தம் நிலைக்காது’’ என கூறி உள்ளார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை சந்திப்பதை உறுதிபடுத்திய டிரம்ப், எல்லாம் சரியாக நடந்தால், புடினுடனான அடுத்த சந்திப்பை திட்டமிடுவதாக கூறி உள்ளார்.

* உக்ரைன் அதிபருடன் டிரம்ப் நாளை சந்திப்பு
புடினை சந்திக்கும் முன்பாக, அவருடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்தால் அடுத்தகட்டமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பாக டிரம்ப் கூறியிருந்தார். அதன்படி, புடினுடனான சந்திப்பை தொடர்ந்து நாளை அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். இந்த அழைப்பிற்காக டிரம்புக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, அமெரிக்காவுடன் சேர்ந்து முக்கியமான பாதுகாப்பு உத்தரவாதங்களை முடிவு செய்வதில் ஐரோப்பிய நாடுகளும் இடம் பெற வேண்டும் என ஜெலன்ஸ்கி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளார். முன்னதாக டிவி சேனலுக்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட சில பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டியிருக்கலாம் என கூறியிருந்தார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என உக்ரைன் தரப்பில் மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவுக்கு 25% கூடுதல் வரி அமல்படுத்தப்படாது
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது கடந்த மாதம் அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. அதன் பின் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி வரும் 27ம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்புக்கு முன்பாக டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘ரஷ்யா ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களில் ஒருவரை இழந்துவிட்டது. ரஷ்யாவிடமிருந்து 40 சதவீத எண்ணெய் வாங்கும் இந்தியாவைத்தான் குறிப்பிடுகிறேன். எனவே, இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரி அமல்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

* உக்ரைன் நேட்டோவில் இணைவதை தடுக்க கூடாது
டிரம்ப்-புடின் சந்திப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில், ‘‘ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணையும் உக்ரைனின் முயற்சியை ரஷ்யா தடுக்கக் கூடாது. உக்ரைன் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற வேண்டும். பிற நாடுகளுடனான உக்ரைனின் ஒத்துழைப்புக்கு எந்த வரம்புகளும் விதிக்கக் கூடாது’’ என கூறப்பட்டுள்ளது.

* இந்தியா-பாக். போரை நிறுத்தினேன்: டிரம்ப்
ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்புக்கு பின் அலாஸ்காவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானத்தில் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டார். அணு ஆயுத போராக மாற வேண்டிய இந்தியா-பாகிஸ்தான் போரை வர்த்தகத்தை வைத்து நிறுத்திவிட்டதாக கூறினார். போர்கள் மோசமானவை என்றும், அவற்றை நிறுத்தி மக்களை ஒன்றுபடுத்துவதற்கான திறன் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

* அமெரிக்கா அண்டை நாடு
ரஷ்ய அதிபர் புடின் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது பேச்சை தொடங்கும் போது, ‘அன்பான அண்டை நாட்டவர்களே‘ என்றார். அமெரிக்காவை அவர் அண்டை நாடாக குறிப்பிட்டார். அலாஸ்காவின் எல்லைக்கும், ரஷ்யாவின் எல்லைக்கும் இடையே கடலில் வெறும் 5 கிமீ மட்டுமே உள்ளன. சர்வதேச நேரத்தை நிர்ணயிக்கும் கோடுகள் இரு பகுதிகளையும் பிரிக்கின்றன. இதனால் அமெரிக்காவை அண்டை நாடாக புடின் குறிப்பிட்டார்.

Related Stories: