மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா தொடக்கம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: தமிழகத்தில் 4வது முறையாக, சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் இணைந்து மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கடற்கரை பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் காற்றாடிகளை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். இந்த காற்றாடி திருவிழா வரும் 17ம் தேதி வரை, தினசரி மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. முதல் நாள் நிகழ்வில், வானில் சிறகடித்து பறந்த காற்றாடிகளை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்கள், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த கலைஞர்கள் 40க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து சுறா மீன், பாண்டா கரடி, சேவல், தேசிய கொடி, மான் உள்பட பல்வேறு உருவங்களில் பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.

நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, சப்-கலெக்டர் மாலதி ஹெலன், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் கவிதா, திருப்போரூர் தாசில்தார் சரவணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், மண்டல மேலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் அன்பு, திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: