சேப்பாக்கம் மத்திய பக்கிங்காம் கால்வாயில் ரூ.31 கோடியில் புனரமைப்பு பணி: அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மத்திய பக்கிங்காம் கால்வாயில் 7.315 கி.மீட்டர் நீளத்திற்கு புனரமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். மத்திய பக்கிங்காம் கால்வாய் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயாகவும், கூவம் நதி மற்றும் அடையாறு நதியின் மூலம் வெள்ள நீரை கடலுக்கு செலுத்துகிற வெள்ள நீர் கடத்தி கால்வாயாகவும் செயல்படுகிறது.

மத்திய பக்கிங்காம் கால்வாயின் நீர்தேக்க திறனை அதிகப்படுத்தும் வகையில் 1 மீட்டர் ஆழத்திற்கு அதிநவீன தூர்வாரும் இயந்திரங்களின் உதவியுடன் தூர்வாரப்படுவதன் மூலம் கால்வாயின் வெள்ள நீர் கடத்தும் திறன் வினாடிக்கு 2,500 கன அடியாக உயரும். இதன் பயனாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி. மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து மத்திய பக்கிங்காம் கால்வாய் மூலம் விரைவில் கடலுக்கு சென்றடையும்.

மேலும், பக்கிங்காம் கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தி, மரக்கன்றுகள் மற்றும் நடைபாதை அமைத்தல், நான்கு இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைப்பது ஆகிய அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.31 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணண் உள்பட அரசு அலுவலர்கள், நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: