குடுமியான்மலை சிகாகிரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்

விராலிமலை, ஏப்.5: குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழாவில் இரண்டு தேர்களில் சோமேஷ் கந்தர் மற்றும் அம்பாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருளினர். விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். செண்டை மேளம், மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற தேரோட்டத்தில் பெண் பக்தர்கள் ஒரு சிலர் பரவச நிலையை அடைந்து மெய்மறந்து ஆடினர்.

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் தத்ரூபமான நுண்ணிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள் நிறைந்த குடைவரைக்கோயிலாகும் இங்கு கர்னாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்ந்த இசைக் கல்வெட்டு குடுமியான்மலையில் மட்டுமே உள்ளது என்பது இக்கோயிலின் தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் இங்கு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றப்பட்டு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முதல் தேரில் சோமேஸ்கந்தர் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து இரண்டாவது தேரில் அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.25 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காலை 8.25 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர் குடுமியான்மலையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 10.55 மணிக்கு நிலையை வந்தடைந்தது.தேரோட்டத்தின் போது பக்தர்கள் தேர் வரும் வழியில் ஆங்காங்கே காத்திருந்து தேங்காய், பூ, பழம் வைத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழாவின் 10ம் நாளான இன்று (5ம்தேதி) தெப்பம் உற்சவம் நடத்தப்பட்டு பங்குனி திருவிழா நிறைவடைகிறது.

The post குடுமியான்மலை சிகாகிரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: