*2 பேருக்கு வலை
திருவாரூர் : புதுச்சேரியில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்திய 600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி கருண்கரட் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொலை, கொ ள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேரளம் இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பகுதியில் வாகன சோதனையில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றினை மறித்தபோது, அந்த காரை ஓட்டி வந்தவரும், உடன் வந்தவரும் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் அந்த வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 750 மி.லி அளவுடைய 600 எண்ணிகையிலான பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மதுகடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த கடையின் உரிமையாளர் குறித்தும் தொ டர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
