உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் கடந்த செவ்வாயன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.மேக வெடிப்பைத் தொடர்ந்து, கீர் கங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பலர் மண்ணில் புதையுண்டதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படை,ராணுவம் உள்ளிட்டவற்றை சேர்ந்த 800 வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கிய 128 பேர் பாதுகாப்பாக நேற்று மீட்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 566 ஆகியுள்ளது. மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில்,‘‘ வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன’’ என்றனர். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் நேற்றுதாராலியில் ஆய்வு நடத்தினார்.
