கோவை காவல்நிலையத்திற்குள் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: எஸ்ஐ., காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

கோவை: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் எஸ்.ஐ., காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை கடைவீதி காவல் நிலையத்தின் (பி1) சட்டம்-ஒழுங்கு பிரிவு தரை தளத்தில் உள்ளது. முதல் தளத்தில் குற்றப்பிரிவு இயங்குகிறது. நேற்று காலை கடைவீதி காவல் நிலையத்தின் குற்றப்பிரிவுக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், எஸ்.ஐ.யின் அறையை திறந்துள்ளார். ஆனால் கதவு உட்புறமாக தாளிட்டிருந்ததால் வேறுவழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, அங்கு மர்ம நபர் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்துகொண்டவர் கோவை பேரூரை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜன் (60) என்பது தெரிய வந்தது. கடைவீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் மாலை ராஜன் தன்னை யாரோ தாக்குவதாக கூறி புகார் அளிக்க வந்துள்ளார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருந்த காரணத்தால், மறுநாள் காலை வரும்படி அங்குள்ள காவலர் ஒருவர் கூறி, அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அவர் அங்கிருந்து செல்லவில்லை. யாரும் கவனிக்காத நேரத்தில் திடீரென மாடியில் ஏறி குற்றப்பிரிவு எஸ்.ஐ.யின் அறைக்கு சென்றார். கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மேஜையில் ஏறி, மின்விசிறியில் தனது வேட்டியால் தூக்கு போட்டுக் கொண்டார். இவை அனைத்தும் காவல்நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடைவீதி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ராஜன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கவனக்குறைவாக செயல்பட்ட கடைவீதி போலீஸ் நிலைய போலீஸ்காரர் செந்தில்குமார் மற்றும் அறையை பூட்டாமல் சென்ற கிரைம் பிரிவு எஸ்.ஐ நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

* சிசிடிவி காட்சிகள் வைரல்
ராஜன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர், காவல் நிலையத்தின் முன்புறம் நடமாடும் காட்சிகள் சிசிடிவியில் பாதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், ராஜன் இரவு 11.04 மணிக்கு டவுன் ஹால் புறக்காவல் நிலையத்திற்குள் புகுந்து 10 நிமிடம் அங்கேயே இருக்கிறார். பின்னர், இரவு 11.16 மணிக்கு பிரபல துணிக்கடை நோக்கி ரோட்டில் ஓடுகிறார். அங்கிருந்து இரவு 11.18 மணிக்கு பிரகாசம் பஸ் நிறுத்தம் வந்து, 11.19 மணிக்கு போலீஸ் நிலையம் செல்கிறார். பின்னர் மீண்டும் 11.24 மணிக்கு போலீஸ் நிலையத்திற்குள் யாருக்கும் தெரியாமல் புகும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

* தம்பி தற்கொலையில் சந்தேகம் எதுவுமில்லை: – சகோதரி பேட்டி
தற்கொலை செய்துகொண்ட ராஜனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் ராஜனின் சகோதரி வீரமணி கூறுகையில், ‘‘எனது தம்பி ராஜன் கடந்த 3 நாட்களாக தன்னை யாரோ அடிக்க வருகின்றனர். போலீசில் சொல்லி இருக்கின்றேன் என சொல்லிக்கொண்டு இருந்தார். கடந்த 3 நாட்களாகவே மனநிலை சரியில்லாமல் இருந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எதுவுமில்லை. ராஜனின் உடலில் எந்த காயமும் இல்லை. போலீசார் மீது எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

* நடந்தது என்ன? கமிஷனர் விளக்கம்
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட ராஜன் திருமணம் ஆகாதவர். அவரது சகோதரி வீரமணி மற்றும் அவரது வயதான தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தன்னை யாரோ கொல்ல வருவதுபோல் உள்ளது என்றும் அவரது தனது சகோதரியிடம் கூறி வந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.19 மணியளவில் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகுந்த அவரிடம், அங்கிருந்த போலீஸ்காரர் செந்தில்குமார் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, அந்த நபர், மனநிலை சரியில்லாமல் இருப்பதை கண்டு, அவரை வெளியில் அழைத்து சென்று அனுப்பியுள்ளார். அதன்பின், அந்த நபர், போலீஸ்காரருக்கு தெரியாமல், போலீஸ் நிலையத்தின் முன்பகுதியில் இருந்த படிக்கட்டு வழியாக ஏறி, முதல் மாடிக்கு சென்றுள்ளார். அங்குள்ள எஸ்.ஐ அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை சுமார் 8 மணியளவில் நிலைய டியூட்டியில் இருந்த போலீஸ்காரர் செந்தில்குமார் அலுவல் நிமித்தமாக முதல் தளத்திற்கு சென்ற போதுதான் மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: