சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற போதைப்பொருள் சோதனையில் 63 கிலோ கஞ்சா பறிமுதல்: 34 வழக்கு பதிவு: 54 பேர் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 54 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர். 62.83 கிலோ கஞ்சா, 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 2.68 கிலோ போதைப்பொருட்கள், 450 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 14 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 05.05.2023 முதல் 11.05.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 54 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 62 கிலோ 830 கிராம் எடை கொண்ட கஞ்சா, 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 2 கிலோ 680 கிராம் போதை பொருட்கள், 450 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள், 14 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 08.05.2023 அன்று கோயம்பேடு, ஜெய் நகர் பார்க் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பியாசதேப் ராணா, வ/21, த/பெ.பிட்டோ ராணா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10.2 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, (PEW/St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 05.05.2023 அன்று காலை, அசோக்நகர், 100 அடி சாலை மற்றும் 4வது அவென்யூ சந்திப்பு அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த அபிஜித் மொண்டா, வ/27, த/பெ.தபான் மொண்டா, அரம்பா ஹுக்லி, மேற்கு வங்காளம், பபு மொஹபத்ரா, வ/27, த/பெ.சக்ரதானா மொஹபத்ரா, பலேஸ்வர், ஒடிசா மாநிலம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, (PEW/Adyar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 05.05.2023 அன்று காலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த பிரேந்திரகுமார் பஸ்வான், வ/33, த/பெ.ராம்லோச்சன் பஸ்வான், பசித்பூர், தர்பங்கா, பீஹார் மாநிலம், குஷே பஸ்வான், வ/20, த/பெ.ரூபன் பஸ்வான், ரைமா, மதுபானி, பீஹார், முகமது ஜாவித், வ/19, த/பெ.முகமது ஹபித் உசேன், ரைமா, மதுபானி, பீஹார் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 05.05.2023 அன்று புது வண்ணாரப்பேட்டை, கீரை தோட்டம், மாநகராட்சி பூங்கா அருகே கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் வைத்திருந்த ஜானகிராமன் (எ) அஜய், வ/24, த/பெ.பாபு, அண்ணாமலை நகர், திருவொற்றியூர், பிரேம்குமார், வ/22, த/பெ.செல்வம், 6வது தெரு, மங்கம்மாள் தோட்டம், புதுவண்ணாரப்பேட்டை, வெங்கடேஷ், வ/24, த/பெ.முத்து, எ.16/6, AE கோயில் தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய மூவரை கைது செய்து, 790 கிராம் மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்து, பின்னர் 07.05.2023 அன்று புதுவண்ணாரப்பேட்டை, சுப்பிரமணிய சிவா தெரு, MPT காலனி, அருகே கண்காணித்து சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்த ஈசா (எ) ஈஸ்வரன், வ/24, த/பெ.குருசாமி, வ.உ.சி நகர், தண்டையார்பேட்டை, சென்னை, எலி (எ) யுவராஜ், வ/23, த/பெ.சண்முகம், லட்சுமி காலனி, தண்டையார்பேட்டை, சென்னை ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1,390 கிராம் மெத்தகுலோன் பறிமுதல் செய்தனர்.

மேலும், N-1 இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 08.05.2023 அன்று இராயபுரம், அண்ணா பார்க் அருகே கண்காணித்து அங்கு காரில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பதுக்கி வைத்திருந்த காசிம், வ/40, த/பெ.சாகுல் அமீது, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், குமரவேல், வ/38, த/பெ.ஜெயராமன், எண்.23, புது நகர், நல்லத்தூர், கடலூர் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 500 கிராம் மெத்தம்பெட்டமைன், செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 09.05.2023 அன்று காலை, ஆதம்பாக்கம், நேதாஜி சாலையில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பிரகாஷ், வ/19, த/பெ.ஏழுமலை, 2வது தெரு, வேளச்சேரி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா, 450 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 10 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 821 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

காவல் குழுவினரின் தொடர் முயற்சியில் 05.04.2023 முதல் 11.05.2023 வரையிலான ஒரு வாரத்தில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் 14 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற போதைப்பொருள் சோதனையில் 63 கிலோ கஞ்சா பறிமுதல்: 34 வழக்கு பதிவு: 54 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: