நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 57 மாடுகள் பிடிபட்டன

*ரூ.44 ஆயிரம் அபராதம்

நெல்லை : நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 57 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.44 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டல பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றன.

இதையடுத்து இவ்வாறு நான்கு மண்டல பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவிட்டார். அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா வழிகாட்டுதலின் பேரில், மண்டலத்திற்கு 2 குழுக்கள் வீதம் நான்கு மண்டலத்திற்கு 8 பேர் கொண்ட சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மாநகர பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடந்தது.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மாநகராட்சிப் பணியாளர்களால் பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து, முதல் முறை ரூ.1000ம், அதற்கு மேல் தொடர்ந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், போலீசார் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக நேற்று தச்சநல்லூர் மண்டலத்தில் 13 மாடுகளும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 16 மாடுகளும், மேலப்பாளையம் மண்டலத்தில் 18 மாடுகளும், நெல்லை மண்டலத்தில் 10 மாடுகளும் என மொத்தம் 57 மாடுகள் மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.44 ஆயிரம் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது. 6 மாட்டு உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை மாட்டுக் கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் அபராத தொகை செலுத்துவது மற்றும் காவல்துறை நடவடிக்கைகளை தவிர்த்திடும் வகையில், மாடுகளை பொது இடங்களில் சுற்றித் திரிய விடாமல், மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கால்நடை விவசாயிகள் தர்ணா

இதனிடையே நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியிலும் போக்குவரத்துக்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார குழுவினர் பிடித்து செல்விநகர் பூங்காவில் அடைத்தனர். இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த மாடுகளின் உரிமையாளர்களான கால்நடை விவசாயிகள், பிடிக்கப்பட்ட தங்களது மாடுகளை விடுவிக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 57 மாடுகள் பிடிபட்டன appeared first on Dinakaran.

Related Stories: