156.76 கோடி டோஸ் செலுத்தி சாதனை தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு

*சிறப்பு தபால் தலை வெளியீடுபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், அதைத் தொடர்ந்து முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 3ம் தேதி முதல் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் சுகாதார, முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதில், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் பெருமை தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் 156.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 43.19 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15-18 வயதுக்கு உட்பட்ட 3 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரத்து 912 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களில் 93 சதவீதம் பேருக்கு முதல் டோசும், 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலையை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது.மனது நிறைந்தது; பிரதமர் உருக்கம்

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘தடுப்பூசி இயக்கத்தில் தொடர்புள்ள ஒவ்வொருவரையும் வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசி திட்டம் பெரும் வலிமையைச் சேர்த்துள்ளது.
உயிர்களைக் காப்பாற்றி, அதன் மூலம் வாழ்வாதாரங்களை பாதுகாத்துள்ளது. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொலைதூரப் பகுதிகளிலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும், அங்கு அவற்றை எடுத்துச் செல்வதையும் நாம் காண முடிகிறது. அவர்களின் சேவையால் நமது இதயமும், மனதும் பெருமிதத்தால் நிறைந்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

The post 156.76 கோடி டோஸ் செலுத்தி சாதனை தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: