1.60 லட்சம் பேர் எழுதிய குரூப்-1 முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியானது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சுமார் 1.60 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஜூலை 13-ம் தேதி நடந்தது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 797 தேர்வு ஹாலில் நடந்த இத் தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் மட்டுமே (67.14 சதவீதம் பேர்) எழுதினர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், “குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மெயின் தேர்வுக்கு 1907 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய வலைத்தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், ”குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டில் எங்கள் அகடாமியில் படித்த 275 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தகட்டமாக டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மெயின் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வுக்கு பிறகு நேர்முக தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் வழங்கப்படும்” என்றார்.

 

The post 1.60 லட்சம் பேர் எழுதிய குரூப்-1 முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியானது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: