திருவாரூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை

திருவாரூர், டிச.4: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தேசிய நல குழு உறுப்பினர் சுந்தரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் பயணிகள் நலக்குழு தேசிய உறுப்பினர் சுந்தர் நேற்றுமுன்தினம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் தணிகாசலம் ,செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் மேற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைத்துத் தரவேண்டும், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ரயில் நிலையத்தின் முகப்பில் பெயர்ப்பலகை அமைத்திட வேண்டும் மற்றும் ரூ ஆயிரம்கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் விரைவு ரயில் சேவையினை துவங்கிட வேண்டும்.

ராமேஸ்வரத்தில் இருந்து திருவாரூர் வழியாக வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கிட வேண்டும் மற்றும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக செங்கல்பட்டு வரையில் பயணிகள் ரயில் இயக்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தேசிய குழு உறுப்பினர் சுந்தர் தெரிவித்ததாக செயலாளர் பாஸ்கரன். தெரிவித்துள்ளார்.

Related Stories: