தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக விற்றால் சட்ட படி நடவடிக்கை எடுக்கலாம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 15: தங்கநகை முதல் காய்கறி வரை குறையுள்ள பொருட்களை விற்றால் சட்ட படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தேசிய நுகர்வோர் தினத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தேசிய நுகர்வோர் தினம், அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ் வருட சித்திரை பிறந்தநாள் விழா உழவர் சந்தையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் உழவர் சந்தை பொறுப்பாளர்கள் சக்திவேல், வடிவுக்கரசி, பாதுகாவலர்கள் தமிழ்ச்செல்வம், கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட நுகர்வோர் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் பேசுகையில், நுகர்வோர் தினம் என்பது உலக அளவில் கொண்டாடப்படும் சிறப்பான நாளாகும். மக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களின் தரம் அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக அளவில் நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.

தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக விற்றால் நுகர்வோர் சட்ட படி நடவடிக்கை எடுக்கலாம். மாவட்ட அளவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாக பொதுமக்களே வழக்கு தாக்கல் செய்து பொருள் வாங்கிய தொகையும் கூடுதலாக நஷ்ட ஈடும் பெறுவதற்கு நுகர்வோர் சட்டத்தில் வழிஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் குழுக்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி பொருட்களின் தரத்தை முறையாக நிலைப்படுத்துகிறது. தரம் இல்லாத பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நுகர்வோர் தின பரிசுகளை சாந்தி வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக விற்றால் சட்ட படி நடவடிக்கை எடுக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: