வாக்கு சாவடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 17 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில், போலீஸ் பார்வையாளர் கர்நாடகா டிஜிபி ஷரனப்பா, திருவாரூர் எஸ்பி ஜெயக் குமார், டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் ஆகியோர் பலமுறை ஆய்வு மேற்கொண்டு வாக்களிக்கும் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

இந்தநிலையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 285 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கும் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்தது. டிஎஸ்பிக்கள் பிலிப் கென்னடி, அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு தலைமை வகித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பேசுகையில், வாக்குசாவடிக்குள் பணியாற்றும் போலீசார் அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய எண், மொபைல் பார்ட்டி எஸ்ஐ எண், தனிப்பிரிவு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட முக்கிய தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும்.

வாக்குச் சாவடிகளை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு எந்த கட்சி சின்னமோ, சுவரொட்டியோ, கொடிகளோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் கூட்டமாக கூடி பேசுவதை தவிர்க்கவும், வாக்களித்த வாக்காளர் கள் உடனே வாக்குச்சாவடி விட்டு செல்லவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தனிப் பிரிவு அலுவலகத்துக்கும் உடன் தெரிவிக்க வேண்டும்.
பொது வாக்கு சாவடியாக இருந்தால் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தை வைத்திருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க உதவி செய்ய வேண்டும்.

வேட்பாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குள் பயணித்து வர அனுமதிக்க கூடாது வாக்கு பதிவின்போது வேட்பாளர் அன்றி அவருடன் வேறு எவரையும் வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க கூடாது. வாக்குப்பதிவின் போது வயதானவர்கள் ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக வருபவரை தவிர வேறு எவரையும் வாக்களிக்கும் இடத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றார்.

இன்ஸ்பெக்டர்கள் கரிகாற்சோழன், சுகந்தி, சந்தானமேரி, ராஜேஷ், கருணாநிதி மற்றும் மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நிலையங்களில் பணியாற்றும் எஸ்ஐக்கள், போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக டவுன் எஸ்ஐ முருகன் வரவேற்றார். வடுவூர் எஸ்ஐ பிரபு நன்றி கூறினார்.

The post வாக்கு சாவடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: