பயிர் இழப்பீட்டுதொகை வங்கி கணக்கில் வரவு திருவாரூர் மாவட்டத்தில் 22ம் தேதி சாலைமறியல் விவசாயிகள் சங்கம் முடிவு

திருவாரூர், அக்.17: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வங்கிகடனில் வரவு வைக்கப்படுவதை கண்டித்து வரும் 22ந் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் நெல் மற்றும் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாய பொருட்கள் சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான நெற்பயிர் காப்பீடு இழப்பீடு தொகை தற்போது அறிவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த இழப்பீடு தொகை என்பது பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படாமல் விடுபட்டுப் போனதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இழப்பீடு தொகை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு கிடைத்துள்ள போதிலும் அந்த தொகையானது அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படாமல் ஏற்கனவே அவர்கள் விவசாயத்திற்காக பெற்ற வங்கி கடனுக்கு வரவு வைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே இதனை கண்டித்து வரும் 22ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில துணை செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக குறுவை சாகுபடி என்பதே இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளும் தொடர்ந்து இயற்கை பேரிடர் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி ஆண்டுதோறும் மகசூல் இழப்பை சந்தித்து வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டுகளில் கஜாபுயல் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகை என்பது முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து கடந்த 5ம் தேதி மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீடு தொகை என்பதும் அவர்களுக்கு வழங்காமல் அவர்கள் பெற்ற வங்கிக் கடனுக்காக வரவைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இதனை கண்டித்தும் இழப்பீடு தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க கோரியும் வரும் 22ம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: