தேசிய கல்வி கொள்கையை முற்றிலும் ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு

நாகர்கோவில், ஜூலை 24: மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய கல்வி கொள்கையை முற்றிலுமாக ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது : மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை அரசு பள்ளிகளை மூடும் வகையில் அமைந்திருக்கிறது.  புதிய கல்வி கொள்கை அறிமுகமானால் 100 சதவீதம் தனியார் வசம் சென்றுவிடும்.  கல்லூரி கல்வி 75 சதவீதம் தனியார் வசம் இருக்கிறது. சுயநிதி கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக சுயநிதி கல்லூரிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவிகளிடம் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்விக்கொள்கை அறிமுகமானால் இந்த கட்டண வசூலிப்பு அதிகரிக்கும். மொத்தத்தில் தேசிய கல்விக்கொள்கை பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியை மாநில அரசுகளிடம் இருந்து பிரித்து முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அமைந்திருக்கிறது.

நாடு முழுவதும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ததாக கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை அளித்து இருக்கிறது. தமிழகத்தில்  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அடிப்படையில் கஸ்தூரி ரங்கன் குழு அரசு பள்ளிகளை ஆய்வு செய்தனர் என்பது தெரிய வில்லை. தேசிய கல்விக்கொள்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடத்த இருக்கிறோம். மேலும் 5,000 இடங்களில் பிரசார கூட்டங்கள் நடத்த உள்ளோம். இதே போல் ரேஷன் கார்டுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இந்த கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது.

நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தேசிய மருத்துவ கவுன்சில் சட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்தால் மருத்துவ கல்வியை சீரழிக்கும். எனவே இந்த சட்டத்தை தாக்கல் செய்யக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். நடிகர் சூர்யா தேசிய கல்விக் கொள்கை குறித்து தெரிவித்த 10 சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதற்கு விளக்கம் அளிக்காமல், தேசிய கல்விக்கொள்கையை விமர்சனம் செய்தார் என கூறி அமைச்சர்களும், பா.ஜ. மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தரம் தாழ்ந்து நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக உள்ளது.பொதுவாக மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தான் கைது செய்வார்கள். ஆனால் நல்ல வேளை சூர்யாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் விட்டு விட்டார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, நிர்வாகிகள் ஸ்டாலின் தாஸ், லீமாரோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: