பயிர் காப்பீடு திட்டத்தில் வாழை ஒரு ஏக்கருக்கு ₹ 75,800 இழப்பீடு கிடைக்கும் தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் தகவல்

நாகர்கோவில், ஜூலை 24:  தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் விடுத்துள்ள அறிக்கை: பிரதமமந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், மாநில அரசின் மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கன மழை, புயல், கடும் வறட்சி போன்ற இடர்பாடுகளின் போது விவசாயிகளுக்கு கைகொடுக்கும். காப்பீட்டு தொகையில் 5 சதவீதம் பிரீமியமாக செலுத்தினால் போதும். குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், தக்கலை, குருந்தன்கோடு, மேல்புறம், முஞ்சிறை, ராஜாக்கமங்கலம், திருவட்டார், தோவாளை ஆகிய வட்டாரங்களில் பரவலாக வாழை, மரவள்ளி, மா சாகுபடி செய்யப்படுகிறது. வாழை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ₹ 3,790 ஆகும். காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ₹ 75,800 கிடைக்கும். மரவள்ளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ₹ 1225 ஆகும். காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு ஒன்றுக்கு ₹ 25,500 கிடைக்கும். வாழை, மரவள்ளி காப்பீடு செய்ய கடைசி நாள் 1.10.2019. மா பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ₹ 900 ஆகும். காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ₹ 18,000 கிடைக்கும். மா காப்பீடு செய்ய கடைசி நாள் 29.2.2020. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள், பொதுசேவை மையம்(இ-சேவை மையம்) ஆகியவற்றில் காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், கணினி பட்டா, அடங்கல் ஆகியவை. விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Related Stories: