பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை, ஜூலை 24:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர்  சுப்பிரமணியன். இவர் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெறும் அன்று சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவருக்கான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் பணி நிறைவு அன்று பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்ற  சஸ்பெண்ட் செய்யக்கூடாது. ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாநில அளவில் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், தணிக்கை அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 900 அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் பாலாஜி, தணிக்கையாளர் அழகுபாண்டி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இது குறித்து நிர்வாகி அழகுபாண்டி கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் தென்காசியில் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில் மாநில செயற்குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யும்’’ என்றார்.

Related Stories: