டாஸ்மாக் கடையை அகற்ற வழக்கு நீதிபதி ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை, ஜூலை 24: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், சட்டப் பணிகள் ஆணைய நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது.மதுரை, மஞ்சணக்கார தெருவைச் சேர்ந்த இப்னு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதியாக இது உள்ளது. இந்தப் பகுதியில் கோயில், சர்ச் மற்றும் பள்ளிக் கூடம் உள்ளது. இதனால், அதிகளவில் பெண்களும், மாணவ, மாணவியரும் நடமாடும் பகுதியாக உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிகாரர்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.

எனவே, இந்தப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே, பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ேநற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் மதுரை மாவட்ட இலவச சட்ட பணிகள் ஆணைய நீதிபதி சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஆக.13க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: