இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் அரசியல் கட்சியினர் திக்... திக்...

மதுரை, மே 23: மதுரை மக்களவைத் தொகுதி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும். இதனால், அரசியல் கட்சியினரும், தொண்டர்களும் பரபரப்பில் உள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில், திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மநீம வேட்பாளர் அழகர் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ல் நடந்தது. வாக்குப்பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஓரு மைக்ரோ அப்சர்வர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவர். சிசிடிவி மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வீடியோவும் எடுக்கப்படும். மையம் முழுவதும் 32 கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

   முதலில் தபால் ஓட்டு எண்ணும் பணி தொடங்கும். அதன்பின்பு ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் எண்ணப்படும். தொடர்ந்து  மின்னணு வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக தேர்வு செய்யப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரம் என 30 விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஓப்புகைப் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும். ஓவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், ஓட்டு விபர படிவத்தில் தேர்தல் பார்வையாளர் கையெழுத்து போட்ட பின், முடிவுகள் வெளியிடப்படும். முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியும். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாலையில் இறுதி முடிவு தெரியும். இதேபோல, திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது.

Related Stories: