மணல்கடத்தல், கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி சுற்றிவளைத்து கைது

குலசேகரம், மே 22: குமரி  கோயில் விழாவில் புகுந்து நிர்வாகிகளை வெட்ட முயன்ற வழக்கில் பிரபல  ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்து  பாளை சிறையில் அடைத்தனர். இவர் மீது நெல்லை, குமரியில் மணல் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.   திருவட்டாரை  அடுத்த வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (26). இவர் மீது  திருவட்டார், அருமனை, களியக்காவிளை, பளுகல், தக்கலை, திருநெல்வேலி மாவட்டம்  ஊத்துமலை ஆகிய காவல் நிலையங்களில் மணல் கடத்தல், அடி-தடி, கொலை முயற்சி  உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு  ஜாமீனில் வெளிவந்துள்ளார்.  ராஜகுமார் ஏதாவது குற்ற வழக்குகளில்  சிக்கும் போது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் அவரது  குடும்பத்தினரோ உடனே உயர் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை ஆணையத்தில்  புகார் தெரிவிப்பது வழக்கமாம். இதனால் ராஜகுமார் மீது கடும் நடவடிக்கை  எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இதை அவர் தனக்கு  சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன்படி ராஜகுமாரின் ரவுடியிசமும்  நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி  வெள்ளாங்கோடு பகுதியில் கோயில் விழா ஒன்று நடந்தது. அப்போது   அரிவாளுடன் புகுந்தவர் அங்கிருந்த பிளக்ஸ் போர்டுகளை கிழித்து  எறிந்துள்ளார். இதை தடுக்க முயன்ற கோயில் நிர்வாகிகளை தாக்கும்  முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

 இதுதொடர்பான வீடியோ  வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இந்த  காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகி ஜார்ஜ் அருமனை காவல்  நிலையத்தில் ராஜ்குமார் மீது புகார் செய்தார். போலீசார் ராஜகுமார் மீது  வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில்தான் அரிவாளுடன்  பாய்ந்து கோயில் நிர்வாகிகளை வெட்ட முயன்ற வீடியோவும் பரவியது. இதையடுத்து  ராஜகுமார் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், அவரை உடனே கைது  செய்யுமாறும் எஸ்பி ஸ்ரீநாத் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.  இதையறிந்த ராஜ்குமார் கடந்த 17ம் தேதி தன் மீது போலீசில் புகார் கொடுத்த  கோயில் நிர்வாகிகளை தாக்க மீண்டும் முயன்றுள்ளார்.  இது தொடர்பாக  அருமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் நேற்று  முன்தினம் தோட்டவாரம் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (43) என்பவருக்கும், அவரது  உறவினருக்கும் இருந்த சொத்து பிரச்னையில் ராஜகுமார் தலையிட்டுள்ளார். இந்த  சம்பவத்தில் ஏசுதாசை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதுகுறித்து அவர்  திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபோல் தொடர்ந்து  பல குற்றச்சம்பவங்களில் இறங்கியதால் ராஜகுமாரை கைது செய்ய போலீசார் தீவிரம்  காட்டினர். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.  இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் தோட்டவாரம் பகுதியில் ராஜ்குமார் பதுங்கி  இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தப்பி ஓடிவிடாமல் இருக்கும்  வகையில் ராஜகுமாரை போலீசார் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து அவரை மடக்கி  பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அதன் பிறகு அவரை தக்கலை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க  உத்தரவிட்டனர். அதன்படி  பாளையங்கோட்டை  சிறையில் ராஜகுமார் அடைக்கப்பட்டார்.

Related Stories: