திருவாரூர் மாவட்டத்திலுள்ள 1,170 வாக்குச்சாவடிகளில் 72 பதற்றமானவை கலெக்டர் தகவல்

திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆயிரத்து 170 வாக்குச்சாவடிகளில் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஆனந்த் தெரிவித்துள்ளார்.   நாகை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைதேர்தலையொட்டி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்காளர் தொடர்பு மையம் மற்றும் ஊடக மையம் ஆகியவற்றினை நேற்று நேரில் பார்வையிட்ட பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆனந்த் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் மூலம் வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் இன்று வரையில் (நேற்று) மொத்தம் ரூ 56 லட்சத்து 43 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வங்கிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி மகளிர் சுயஉதவி குழு போன்றவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 மேலும் தேவையின் அடிப்படையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அதிகரிக்கப்படும்.  மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆயிரத்து 170 வாக்குச்சாவடிகளில் இதுவரையில் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் விபரம் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சார செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தின் 2வது தளத்தில் ஊடக மையம் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் செய்யும் விளம்பரங்களை பதிவு செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின அலுவலர்களிடம்  மாவட்ட தேர்தல் அலுவலரின் ஒப்புதலுடன் சமர்ப்பிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகள் அடங்கிய வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகள் இருப்பின் அது தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் அறை எண் 1ல் இயங்கி வரும் வாக்காளர் தொடர்பு மையத்திற்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

Related Stories: