பயிர்காப்பீடு, கஜாபுயல் நிவாரணம் வழங்காத அதிமுக, பாஜக கூட்டணியை தேர்தலில் தோற்கடிப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி பேட்டி

திருத்துறைப்பூண்டி, மார்ச்14: பயிர்காப்பீடு,கஜாபுயல் நிவாரணம் வழங்காத அதிமுக பாஜக கூட்டணியை தேர்தலில் ேதாற்கடிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக பயிர்காப்பீடு தொகையை உரிய முறையில் வழங்காமல் மத்திய மோடி அரசு இழுத்தடித்து வருகிறது. ஏற்கனவே 2016-2017ம் ஆ்ண்டு விடுபட்டுப்போன பட்டியல் குறித்து கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்கள்  நடத்தப்பட்டது. பின்னர் காப்பீடு நிறுவனத்துடன் பேசி விடுபட்டு போனவர்களுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் விடுபட்டவர்களின் பட்டியலை ஆய்வு செய்து காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த தொகை தற்போது வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை பெறுவதற்கு கூட்டுறவு அலுவலகங்களுக்கு விவசாயிகள் சென்றால் அதுவும் குறைந்த தொகை தான் வந்துள்ளது. இதிலும் பெரும்பாலான விவசாயிகள் விடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சில இடங்களில் வழங்கியும், சில இடங்களில் வழங்காமலும் இழுத்தடித்து வருகின்றனர்.அதே போல் கடந்த ஆண்டு 2018-ம் ஆண்டு காப்பீடு தொகையும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் யாரிடம் புகார் தெரிவிப்பது என்று புரியாமல் விவசாயிகள் குழம்பிப் போய் உள்ளனர். இன்னொருபுறம் அண்மையில் ஏற்பட்ட கஜாபுயலின் பாதிப்பில் தமிழக அரசு வழங்கிய பொருட்கள் மற்றும் வீட்டுநிவாரணம், தென்னை பாதிப்பு நிவாரணம், ஆடு மாடுகள் உயிரிழப்புக்கான நிவாரணம், மனித உயிரிழப்புக்கான இழப்பீடு என எல்லாமே அரையும் குறையுமாக முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது.அதிகாரிகள் கணக்கு எடுத்து சென்றதில் பாதிக்கப்பட்டவர்களின் ஏராளமானவீடுகளுக்கு நிவாரணம் கணக்கில் ஏறாமல் பல பேர்   தாசில்தார் உள்ளிட்டஅதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். இப்போது வரை பயிர் நிவாரணம் கேட்டும், கஜா புயல் நிவாரணம் கேட்டும் பல தரப்பட்ட மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்காப்பீடு மற்றும் கஜா புயல் நிவாரணம் வழங்காத அதிமுக, பாஜக கூட்டணியை வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிப்போம் என்றார்.

Related Stories: