தேர்தல் பணிச்சுமையால் எப்போதுமே எட்டாக்கனியாக மாறிவரும் தபால் ஓட்டு

திருமங்கலம், மார்ச் 14: தேர்தல் பணிசுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்யும் தபால் ஓட்டு முறை எட்டகனியாக மாறி வருவதாக போலீசார் புலம்புகின்றனர்.நாடாளுமன்றம், சட்டமன்றம் முதல் உள்ளாட்சி வரை என அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு தருவது காவல்துறையினர். நாட்டில் அனைத்து குடிமகன்களும் ஓட்டுப்போட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்திவருகிறது. இதன்படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தபால்ஓட்டு முறை உள்ளது. இது போலீசாருக்கும் பொருந்தும். ஆனால் மற்ற அரசுதுறை ஊழியர்களை போல் போலீசார் அனைவராலும் தபால் ஓட்டுகளை போட இயலவில்லை. காரணம் இவர்களது பணிச்சுமை. தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து போலீசாருக்கு தொடர்ந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருந்து கொண்டே வருகிறது. அதேபோல் தேர்தல் நேரத்தில் இவர்கள் வேறொரு உட்கோட்டத்தில் பணிக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால், இவர்களில் பெருபாலனோர் தபால் ஓட்டுகளை போடலாம் என்றாலும் அதுவும் இவர்களுக்கு எட்டாகனியாகவே உள்ளது. போலீசாருக்கு தபால் ஓட்டு போடும் படிவங்கள் குறிப்பிட்ட 2 நாடகளில் மட்டுமே தாலுகா அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் வெளியூரில் பணிபுரியும் போலீசார் பெருபாலனோர் படிவங்களை வாங்க முடியாதநிலை உள்ளது.

இதனை விட்டால் எஸ்பி அலுவலகத்தில் சென்று வாங்கவேண்டும். இதனால் பாரம் வாங்க நேரமில்லாமல் போலீசார் பலரும் தங்களது ஜனநாயக கடமையை செய்யாத நிலை உருவாகி வருகிறது. சுமார் 2 லட்சம் போலீசார் பணிபுரியும் தமிழகத்தில் 7 சதவீத போலீசார் தான் வாக்களிக்கும் நிலை உள்ளது என்கின்றனர் போலீசார். எனவே வருங்காலங்களில் அனைவரும் வாக்களிக்க எளிய நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்பதே போலீசாரின் எண்ணமாக இருக்கிறது.இதுகுறித்து போலீசார் சிலர் கூறுகையில், ‘தபால் ஓட்டுபோடும் படிவங்களை அந்தந்த விஏஓ அலுவலங்களில் கிடைக்கும்படி செய்தால் எளிதாக வாங்கி வாக்களிக்க முடியும். இதனையும் தவறவிடும் போலீசார் தேர்தல் தினத்தன்று தங்களது அடையாள அட்டை, ஆதார் கார்டு கொண்டு பணிபுரியும் மையங்களில் தபால் வாக்களிக்க வசதிகளை செய்து தரவேண்டும். இல்லையெனில் தேர்தல்களில் வாக்களிப்பது தங்களுக்கு எப்போதுமே எட்டாகனியாகவே இருந்துவிடும்’ என்றனர்.

Related Stories: