ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுவிப்பு

நாகர்கோவில், மார்ச் 12:  குளச்சலை சேர்ந்த சகாயபீட்டர்(45), பொழிக்கரையை சேர்ந்த அமிர்தம் கார்மல் என்ற சுதர்சன்(43), மார்த்தாண்டம்துறையை சேர்ந்த கிறிஸ்தடிமை(23) ஆகியோர் சவுதி அரேபியா நாட்டில் தரீண் என்ற இடத்தில் ஜாப்அல்பரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்கள் கடந்த ஜனவரி 2ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5ம் ேததி கடற்கொள்ளையர்கள் வந்து படகை தாக்கினர்.

 5ம் தேதி அரபி கடலோர காவல்படைக்கும் கடல் கொள்ளையருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் கடலோர காவல் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இறந்தார். அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த சகாயபீட்டர், அமிர்தம் கார்மல், சுதர்சன் ஆகியோரை கடற்கொள்ளையர்கள் ஈரான் நாட்டுக்கு கடத்திச்கொண்டு சென்றனர். பின்னர் ஈரான் அரசிடம் சிக்கிய இந்த மீனவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட இந்த மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி ஈரான் அரசு இந்த 3 மீனவர்களையும் விடுவித்தது. இதையடுத்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்களை தமிழக அரசின் மீனவளத்துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், இணை இயக்குநர் ஜூடு ஆம்ஸ்ட்ராங், தெற்காசிய மீனவர் தோழமை சர்ச்சில் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தனியார் பஸ் மூலம் நேற்று காலை நாகர்கோவில் வந்த அவர்கள் குமரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்தனர்.

 அங்கு மீனவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரான் சிறையில் இருக்கும் போது இந்திய தூதரக அதிகாரி ஹரீஷ்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அதிகாரி தினேஷ்குமார்ஒலிவர் ஆகியோர் நேரடியாக வந்து பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் எங்களது விடுதலைக்கு வேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்தனர். மேலும் நாங்கள் விடுதலையாவதற்கு முயற்சி செய்த தமிழக முதல்வர், வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தெற்காசிய மீனவர் தோழமை பொதுசெயலாளர் சர்ச்சில் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்

Related Stories: