பாராளுமன்ற தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அழைப்பு

நாகர்கோவில், மார்ச் 12: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக நியமனம் செய்யப்படவுள்ளனர். தேர்தல் பாதுகாப்புபணியில் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் நிலையில் 60 வயதிற்குட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள், இளநிலை அலுவலர்கள் மற்றும் மாநில அரசு, அரசுடமை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் முன்னாள் படை வீரர்கள் அனைவரும் தேர்தல் நாட்களில் 4 நாட்கள் சிறப்பு காவலர்களாக பணியாற்றலாம். தங்களது விருப்பத்தினை வருகிற 31ம் தேதிக்குள் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி உரிய படிவத்தில் விருப்பத்தினை தெரிவிக்கலாம்.

நேரில் வர இயலாதவர்கள் www.kanniyakumari.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், ரயில்வே பீடர் ரோடு, கோட்டார், நாகர்கோவில் என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம். இதில் பணியாற்றும் நாட்களுக்கு உணவுபடி மற்றும் மதிப்பூதியம் தகுதிக்கேற்றவாறு வழங்கப்படும். சிவில் உடையில் காவல்துறை வழங்கும் அடையாள அட்டையுடன் பணியாற்றிடவேண்டும். பணியின் போது ஏற்படும் விபத்து மற்றும் உயிர்சேதம் ஆகியவற்றிற்கு தக்க இழப்பீடு அரசால் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: