நலத்திட்ட உதவிகளுக்கு புதிய பயனாளிகள் தேர்வு செய்ய தடை குமரியில் 208 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் பேட்டி

நாகர்கோவில், மார்ச் 12:  நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே  நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 31.01.2019 நிலவரப்படி 20 லட்சத்து 4,814 என்ற அளவில் மக்கள்தொகை உள்ளது. இதில் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 73 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வேட்பு மனுதாக்கல் முடியும் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலும். பின்னர் தேர்தல் ஆணைய உத்தரவு பெற்று அந்த மனுக்கள் பரிசீலிக்கப்படும். குமரி மாவட்டத்தில் 1,694 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சாய்வுதளம், மின்விளக்கு உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசதிகள் செய்யப்படும். மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 18 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் பல்வேறு பிரிவாக நியமிக்கப்பட்டுள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளும் 117 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 117 மண்டல குழுக்கள், அவற்றுக்கு 12 ரிசர்வ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வாக்குச்சாவடிகள் பராமரிப்பு, தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்தல், வாக்குபதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டுசென்று திரும்ப எடுத்து வருதல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.

மேலும் 6 தொகுதிகளுக்கும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 மணி நேரத்துக்கு ஒரு குழு வீதம் தொகுதிக்கு 3 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் தீவிரம் காட்டுவர். இதுபோல நிலையான கண்காணிப்பு குழுவும் சட்டமன்ற தொகுதிக்கு 3 வீதம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடியோ குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக கூடுதல் கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் தேர்தல் வாக்குப்பதிவு, அதுசார்ந்த பணிகளுக்கு என மத்திய அரசு அலுவலர்கள் உட்பட 8,552 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் விவிபேட் கருவி, ரிசர்வ் உட்பட 1,923 செட் தயார் நிலையில் உள்ளன. மேலும் 150 யூனிட் விவிபேட் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மின்னணு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட், தேர்தல் பணி அலுவலர்கள் நிலை-1, 2, 3, 4 என அனைவரும் கணினி வாயிலாக ‘ரேண்டம்’ முறையில் தேர்வு செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதால் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை யார் எங்கே செல்கிறார்கள், எந்த கருவி எந்த வாக்குசாவடிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் விரைவில் தொகுதிக்கு வர இருக்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் 48 இடங்களில் அமையப்பெற்றுள்ள 208 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கணக்கிடப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மைக்ரோ அப்சர்வர்கள் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கூடுதல் துணை ராணுவ படைகள் வருகை தொடர்பான விபரங்கள் வரும் நாட்களில் தெரிய வரும். குமரி - கேரள எல்லைப்பகுதிகளில் வாக்காளர்கள் இரு மாநிலத்திலும் கள்ள ஓட்டுக்களை பதிவு செய்வதை தடுக்க 2 மாநில தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். ேமலும் c-vijil ஆன்ட்ராய்டு ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாகவும் புகார்களை தெரியப்படுத்தலாம். இதில் புகார் அளிப்பவர் விரும்பினால் அவரது சுய விபரத்தை தெரிவிக்காமலேயே புகார்களை அளிக்கலாம். அரசு நலத்திட்டங்களுக்கு புதிதாக பயனாளிகளை தேர்வு செய்யக்கூடாது. ஏற்கனவே வழக்கத்தில் இருந்து வருகின்ற முதியோர் உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். ₹2,000, ₹6,000 போன்ற திட்டங்களில் புதிதாக பயனாளிகள் சேர்க்கப்பட மாட்டார்கள். அதுபோல புதிதாக பணிகள் தொடங்குவது, டென்டர் பிறப்பிப்பது போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி உடன் இருந்தார்.

தேர்தல் நடத்தை விதிகளை அதிகாரிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரசாந்த் எம்.வடநேரே தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், நாகர்கோவில் சப் கலெக்டர் விஷ்ணு சந்திரன், பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதீக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முதல்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும், தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக பின்பற்றுவது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் நடந்தது. திமுக சார்பில் லீனஸ்ராஜ், அதிமுக சார்பில் விக்ரமன், ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் சுயம்பு, பா.ஜ சார்பில் ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் சார்பில் கண்ணன், தேமுதிக சார்பில் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து இடங்களிலும் உள்ள கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். அரசு சுவர்களில் விளம்பரம் கூடாது. நகர பகுதிகளில் எங்கும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கிராமப்புறங்களில் அனுமதிபெற்று தனியார் சுவர்களில் விளம்பரம் செய்யலாம். ஆனால் அது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். அதற்கு கொடிகளை அகற்றலாம், கொடிக்கம்பங்களை வாக்குச்சாவடிகளின் அருகில் மட்டும் அகற்றி கடந்த முறை நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று இந்த முறையும் செய்ய வேண்டும் என கட்சியினர் கேட்டுக்ெகாண்டனர். அப்படியானால் கொடிக்கம்பங்களையும் காகிதத்தால் ஒட்டி மறைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இல்லையெனில் அது தொடர்பான செலவுகள் கட்சியின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: