தூத்துக்குடியில் 6 மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

தூத்துக்குடி, பிப். 14: தூத்துக்குடியில் புதிய தொழில்முனைவோர்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். தூத்துக்குடி துடிசியா கூட்டரங்கில் புதிய தொழில்முனைவோர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டத்தின்கீழ் தகுதியான நபர்களுக்கு ரூ.30 லட்சம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 45 நபர்களுக்கு தொழில் தொடங்குவது மற்றும் வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து பயிற்சிகளும் இன்று முதல் 15 நாட்கள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனத்தை சேர்ந்த அலுவலர்கள், முன்னோடி வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர். சுயதொழில் துவங்குவதற்கு இந்த பயிற்சியில் வழங்கும் அறிவுரைகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இப்பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு புதிய தொழில் துவங்கி தங்களது வாழ்வில் வெற்றி பெற வேண்டும். என்றார்.தொடர்ந்து புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுய தொழில் துவங்க உள்ள 5 நிறுவனங்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் பெறுவதற்கான கடிதத்தினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய துணை மேலாளர் சொர்ணலதா, குறு, சிறு நடுத்தர தொழில் உதவி இயக்குநர் ஜெரினா பப்பி, மாவட்ட முன்னோடி வங்கி துணை மேலாளர் விஜயகுமார், துடிசியா தலைவர் நேருபிரகாஷ், செயலாளர் ராஜ்செல்வின், பொருளாளர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: