காதல் ஜோடியை மிரட்டிய வழக்கு ஈரோடு கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

ஈரோடு, பிப். 13:  காதல் ஜோடியை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர் யுவராஜ் ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (19). இவரும், இவருடன் கல்லூரியில் படித்த சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூரை சேர்ந்த பாலாஜி (21) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர் யுவராஜ் உட்பட 3 பேர் காதல் ஜோடியை கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 1ல் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக திருச்சி மத்திய சிறையில் இருந்து யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஈரோடு நீதிமன்றத்துக்கு ்அழைத்து வரப்பட்டார்

நீதிபதி சாந்தி வழக்கை விசாரித்து மார்ச் மாதம் 4ம் தேதி யுவராஜை மீண்டும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து அவர்  பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories: